லோக்சபா தேர்தலில் தேமுதிகவுடன் அண்ணா திமுக அதிகாரப்பூர்வமாக கூட்டணிப் பேச்சுவார்த்தையை நடத்தியது. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை அதிமுக மூத்த தலைவர்களான கேபி முனுசாமி, தங்கமணி, எஸ்பி வேலுமணி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

தமிழக அரசியலில் எதிர்க்கட்சி அந்தஸ்து வரை அதிவேகமாக விஸ்வரூபம் காட்டிய கட்சி தான் தேமுதிக. ஆனால் தேமுதிகவை எந்த பெரிய கட்சியும் சீண்டாமல் ஒதுக்கியே வைத்திருந்தன. கடந்த 2021 தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் தேமுதிக பெற்ற வாக்குகள் வெறும் 0.48%. நோட்டாவுக்கு 0.75% வாக்குகள் கிடைத்தன.
நோட்டாவிடம் தோற்றுப் போகும் கட்சி என்பதால் எந்த ஒரு கட்சியும் தேமுதிகவை கண்டுகொள்ளாமல் இருந்தன. நம்ம சென்னையில் இருந்த போதும் தேமுதிக தலைமை, பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு ஆதரவான போக்கை வெளிப்படுத்தி வந்தது.

அப்படி இருந்தும் டெல்லியில் நடைபெற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்துக்கு தேமுதிக அழைக்கப்படவில்லை. தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு பின்னரே பாஜக பார்வை தேமுதிக பக்கம் திரும்பியது.
இதனால் லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் தேமுதிக இடம் பெறக் கூடும் என்கிற எதிர்பார்ப்பும் இருந்தது. அப்போது தேமுதிகவோ பாஜக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுடனும் கூட்டணி, தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை மறைமுகமாக நடத்தி வந்தது.

முதலில் 14 லோக்சபா தொகுதிகள், 1 ராஜ்யசபா கொடுக்கும் கட்சிகளுடன் கூட்டணி என அறிவித்தார் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா. பின்னர் அப்படி எல்லாம் நிபந்தனை விதிக்கவே இல்லை என பல்டி அடித்தார் பிரேமலதா.
இதனை அடுத்து 3 அல்லது 4 லோக்சபா தொகுதிகளை தேமுதிகவுக்கு தர அதிமுக முன் வந்ததாக கூறப்பட்டது. ஆனால் தேமுதிகவோ 4 லோக்சபா தொகுதிகள் பிளஸ் 1 ராஜ்யசபா சீட் தந்தாக வேண்டும் என அதிமுகவிடம் பேரம் பேசியது.

ஆனால் ராஜ்யசபா சீட் தருவதற்கு அதிமுக முன் வரவில்லை எனவும் கூறப்பட்டது. இந்த பின்னணியில் இன்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை அதிமுக மூத்த தலைவர்களாக கேபி முனுசாமி, தங்கமணி, எஸ்பி வேலுமணி, கேபி அன்பழகன் உள்ளிட்டோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

பிரேமலதாவின் சென்னை சாலிகிராமம் இல்லத்தில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தேமுதிக தரப்பில் பிரேமலதா, எல்கே சுதீஷ், பார்த்தசாரதி ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.