கடலூர் அருகே வாலிபர் தலையில் பலத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவர் அடித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதோ காரணங்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம், அடுத்த தூக்கணாம்பாக்கம் அருகே உள்ள பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மனைவி சாந்தி வயது (52). இவர்களது மகன் குணசீலன் வயது (35). ஆனந்தன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார். அப்போது குணசீலனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று கூறப்படுகிறது.

இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இந்த நிலையில் நேற்று அதிகாலை குணசீலன் தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக தூக்கணாம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குணசீலனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, குணசீலன் எப்படி இறந்தார்? அவரை யாரேனும் அடித்து கொலை செய்தார்களா? இல்லை வேறு ஏதேனும் காரணம் உண்டா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தூக்கணாம்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உயிரிழந்த குணசீலனுக்கு திருமணம் ஆகாததால், தனது தாயாருடன் வசித்து வந்துள்ளார். மேலும் அடிக்கடி குடித்து விட்டு எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு குணசீலன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி சாந்தி புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் குணசீலனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதன் பின்னர் குணசீலன் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்த நிலையில் குணசீலன் சாந்திக்கு மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்தாரா? இதன் காரணமாக அவர் அடித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா என்பது குறித்து குணசீலனின் தாயார் சாந்தியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில்;-

குணசீலன் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்று விசாரணை நடத்தினோம். அப்போது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு முழு விவரமும் தெரியவரும். இருப்பினும் குணசீலனின் தாயார் சாந்தியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று போலீசார் கூறுகின்றனர்.