பாஜக தலைவர் அண்ணாமலையை வரவேற்க அனுமதி இன்றி பிளக்ஸ் பேனர் வைத்ததாக நான்கு சக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்ததால் கருமத்தம்பட்டியில் 100க்கும் மேற்பட்ட பாஜகவினர் சாலை மறியல் ஈடுபட்டனர். வாகன ஓட்டிகள் பெரும் அவதி.
என் மண் என் மக்கள் யாத்திரையின் ஒரு பகுதியாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் பல பகுதிகளில் நடைபயனம் மேற்கொண்டு வருகிறார்.அந்த வகையில் பல்லடம் சென்று சட்டமன்ற தொகுதி மற்றும் சூலூர் சட்டமன்ற தொகுதியில் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். மாலையில் சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கருமத்தம்பட்டி பகுதியில் நடைபயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் அவரை வரவேற்கும் விதமாக கருமத்தம்பட்டி நகர பாஜகவினர் பல்வேறு இடங்களில் பிரம்மாண்ட பிளக்ஸ் பேனர்களை வைத்துள்ளனர்.தமிழகத்தின் பல பகுதிகளில் அண்ணாமலை மேற்கொள்ளும் எல்லா இடங்களிலும் வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

இன்நிலையில் காவல்துறை மற்றும் நகராட்சி அனுமதி இன்றி சாலை ஓரங்களில் இந்த பேனர்கள் வைக்கப்பட்டதால் பேனர் வைக்ககூடாது என எச்சரித்தனர்.அதையும் மீறி பாஜக வினர் பேனர் வைக்க முற்பட்டனர்.அதனை தொடர்ந்து பேனரை எடுத்து வந்த வாகனங்களை கருமத்தம்பட்டி காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனை அடுத்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை விடுவிக்க கோரி 100க்கும் மேற்பட்ட பாஜகவினர் கருமத்தம்பட்டி நான்கு முனை ரோட்டில் சாலை மறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலும் அந்தப் பகுதி வழியாக வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை பாஜகவினர் மிரட்டி அங்கேயே நிறுத்தியதால் பொதுமக்களுக்கும் பாஜகவினருக்கும் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அடுத்து கருமத்தம்பட்டி துணை கண்காணிப்பாளர் தையல் நாயகி மற்றும் காவல் ஆய்வாளர் அன்னம் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.ஆனால் பாஜக வினர் போலீசாரின் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை,தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எனினும் அவர்கள் கலைந்து செல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது பாஜகவினர் காவல்துறையினரிடம் பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருமையில் பேசியதால் மீண்டும் அப்பகுதி பெரும் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் மறியலில் ஈடுபட்ட சிலறை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து மறியல் போராட்டம் செய்தால் மற்றவர்களும் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.இதனால் அந்த பகுதி சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது.