தமிழகத்தில் 9 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. கோவையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும், தென் சென்னையில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும் போட்டியிடுகின்றனர்.
தமிழகத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில், பாஜகவில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது. இந்த நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், கூட்டணி கட்சிகளுடன் 39 தொகுதிகளுக்கான பங்கீடு நேற்றுடன் முடிந்தது.

பாமகவுக்கு 10 தொகுதிகள், தமாகா 3, அமமுக 2 மற்றும் புதிய நீதிக்கட்சி, ஐஜேகே, ஜான் பாண்டியனின் தமமுக, தேவநாதனின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில், பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இந்த நிலையில், 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை பாஜக தேசிய தலைமை நேற்று வெளியிட்டது. அதன் விவரம்:

1. தென்சென்னை – தமிழிசை சவுந்தரராஜன்,
2. மத்திய சென்னை – வினோஜ் பி.செல்வம்,
3. கிருஷ்ணகிரி – நரசிம்மன்,
4. நீலகிரி (தனி) – எல்.முருகன்,

5. கோவை – அண்ணாமலை,
6. நெல்லை – நயினார் நாகேந்திரன்,
7. கன்னியாகுமரி-பொன். ராதாகிருஷ்ணன்,
8. வேலூர் – ஏ.சி.சண்முகம்,

9. பெரம்பலூர் – பாரிவேந்தர்
ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில், தாமரை சின்னத்தில் 4 கூட்டணி கட்சிகள் போட்டியிட உள்ளன. அந்த வகையில், தமிழகத்தில் 24 தொகுதிகளில் தாமரை சின்னத்திலும், 15 தொகுதிகளில் கூட்டணி கட்சியினர் அவர்களது சின்னத் திலும் போட்டியிடுகின்றனர்.

ஏற்கெனவே, மார்ச் 2-ம் தேதி 195 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலையும், 13 ஆம் தேதி 72 வேட்பாளர்கள் கொண்ட 2-வது பட்டியலையும் பாஜக தேசிய தலைமை வெளியிட்டது. தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை முடியாததால், தமிழக பாஜக வேட்பாளர்களின் பெயர்கள் அதில் இடம்பெறவில்லை.

தமிழகத்தில் தற்போது, முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், பாஜக போட்டியிடும் மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.