பெண்களுக்கான அதிகாரம், முன்னேற்றத்தை தரும் அரசாக பாரதிய ஜனதா அரசு உள்ளதாக பிரதமர் மோடி கூறினார். தமிழ்நாட்டுக்கு கடந்த இரண்டரை மாதங்களில் 4 முறை வந்துள்ள பிரதமர் மோடி நேற்று 5 வது முறையாக மீண்டும் வந்தார்.
கன்னியாகுமரி அடுத்த அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது;- அன்பார்ந்த தமிழ் சகோதர, சகோதரிகளே வணக்கம். நாட்டின் தென் கோடியான கன்னியாகுமரியில் இருந்து ஒரு அலை புறப்பட்டு இருக்கிறது.

இது நீண்ட தூரம் பயணிக்க போகிறது. பாஜக ஆட்சியில் மக்கள் நல திட்டங்கள் ஏராளமாக உள்ளன. அப்போது நிறைய விமான நிலையங்களை நாட்டுக்கு தந்து உள்ளோம். கேலோ இந்தியா திட்டம் மூலம் விளையாட்டு துறையை உன்னதமான இடத்துக்கு கொண்டு சென்றுள்ளோம்.
இந்த பட்டியல் மிக நீளமானது. கன்னியாகுமரி எப்போதும் பாஜகவுக்கு ஏராளமான அன்பை கொடுத்து கொண்டிருக்கிறது. வாஜ்பாய் வடக்கு, தெற்கு பகுதியை இணைத்துள்ளார். கன்னியாகுமரி அஞ்சுகிராமம் அருகே நரிக்குளம் பாலம் கிடப்பில் போடப்பட்டிருந்தது.

கடந்த 2014-ல் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு தான் பால பணிகள் நிறைவேற்றப்பட்டன. கன்னியாகுமரி திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை விரைவில் செயல்பாட்டுக்கு வர இருக்கிறது.
கடந்த மாதம் தூத்துக்குடி வ.உ.சி துறைமுக கண்டெய்னர் டெர்மினலுக்கு அடிக்கல் நாட்டினேன். மீனவர்கள் நலனுக்காக நவீன மீன்பிடி படகுகளுக்கு நிதி உதவி அளித்ததுள்ளோம். தமிழகத்தில் 10 ஆண்டுகளில் ரூ.50 ஆயிரம் கோடி செலவிலான நெடுஞ்சாலை பணிகள் முடிவடைந்து விட்டன.

அப்போது ரூ.70 ஆயிரம் கோடிக்கான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழ்நாடு ரயில்வே வளர்ச்சிக்கு ரூ.6300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளோம். தமிழகத்தின் கலாச்சாரம், பண்பாட்டை பாதுகாக்க பா.ஜ.க தீவிரம் காட்டி வருகிறது.
ஜல்லிக்கட்டு நடைபெற பாஜக அரசு தான் காரணம் ஆகும். புதிய நாடாளுமன்றத்தில் தமிழரின் பெருமையை நிலைநாட்ட செங்கோல் நிறுவினோம். இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை மீட்டு வந்தோம்.

நம் அரசு மீனவர்களுக்கு என்றும் துணை நிற்கும். ஒன்றியத்தில் உள்ள நம்முடைய அரசு எப்போதுமே பெண்களுக்கான அரசு. பெண்களுக்கு முன்னேற்றம், அதிகாரம் அளிக்கும் அரசாக பாரதிய ஜனதா அரசு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.