பரஸ்பாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மேத்யூ வேட் முதலில் பந்து வீச முடிவு செய்தார். யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ருத்ராஜ் கெய்க்வாட் இணைந்து இந்திய அணியின் இன்னிங்சை தொடங்கினர். ஜெய்ஸ்வால் 6 ரன் எடுத்து பெஹண்டார்ப் பந்து வீச்சில் கீப்பர் வேட் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த இந்திய அணியின் கீப்பர் இசான் கிஷன் டக் அவுட்டாகி வெளியேற, இந்திய அணி 2.3 ஓவரில் 24 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறியது.
இந்த நிலையில் ருத்ராஜ், கேப்டன் சூரியகுமார் இணைந்து 3-வது விக்கெட்டுக்கு 57 ரன் சேர்த்தனர். சூரியகுமார் 39 ரன் (29 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) விலாசி பெவிலியன் திரும்பினார். திலக் வருமா பொறுப்புடன் கம்பெனி கொடுக்க அதிரடியில் இறங்கிய ருத்ராஜ் 32 பந்தில் அரை சதம், 52 பந்தில் சதம் அடித்து அசத்தினார். மேக்ஸ்வெல் வீசிய கடைசி ஓவரில் ருத்ராஜ் 2 பவுண்டரி 3 சிக்சர்களை பரக்க விட இந்திய அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 222 ரன் குவித்தது.

அந்த ஓவரில் மட்டும் 30 ரன் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. முதல் 10 ஓவரில் 80 எடுத்து இருந்த இந்திய அணி அடுத்து 10 ஓவரில் ருத்ராஜ்யின் ருத்ரதாண்டவத்தால் 142 ரன்களை சேர்த்து மிரட்டியது. ருத்ராஜ் 123 ரன் (57 பந்து, 13 பவுண்டரி, 7 சிக்சர்), திலக் வருமா 31 ரன் (24 பந்து, 4 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதைத்தொடர்ந்து 20 ஓவரில் 223 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. ஹெட், ஆர்டி இணைந்து துறத்தலை தொடங்கினர். ஆர்டி 16, ஹெட் 35 ரன் எடுத்து விக்கெட்டை பறி கொடுக்க இங்கிலீஷ் 10 ரன்னில் வெளியேறினார்.மேக்ஸ்வெல் – ஸ்டாய்னிஸ் ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்த போராடியது. பத்து ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட் இழப்புக்கு 105 ரன் எடுத்திருந்தது.

ஸ்டாய்னிஸ் 17 ரன்னில் வெளியேற, அடுத்து வந்த டீம் டேவிட் டக் அவுட் ஆனது ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடியை அதிகரித்தது. எனினும் மேக்ஸ்வெல் 28 பந்தில் அரை சதம் அடித்து அந்த அணிக்கு நம்பிக்கையை தந்தார். கடைசி ஐந்து ஓவரில் ஆஸ்திரேலியா அணி வெற்றிக்கு 78 ரன் தேவைப்பட்ட நிலையில் மேக்ஸ்வெல் வழக்கம் போல சிக்ஸர்களாக தூக்கி மிரட்ட, ஆட்டம் பரபரப்பானது. பிரசித் கிருஷ்ணா வீசிய கடைசி ஓவரில் 21 ரன் தேவை என்ற நிலையில் மேக்ஸ்வெல் அதை சாதித்து காட்டினார்.
ஆஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 225 ரன் எடுத்து திரில் வெற்றி பெற்றது. மேக்ஸ்வெல் 104 ரன் (48 பந்து, 8 பவுண்டரி, 8 சிக்ஸர்) வேட் 28 ரன்னுடன் (16 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இந்திய பந்து வீச்சில் ரவி 2, ஹர்ஷிதீப், ஆவேஷ், அக்சர் தல 1 விக்கெட் வீழ்த்தினர். இந்தியா 2-1 என முன்னிலை வகிக்க, நான்காவது போட்டி ராய்ப்பூரில் நாளை மறுநாள் நடக்கிறது.