கடலூரில் பாமக பிரமுகரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்ய முயன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த சிறுவன் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது.
கடலூர் மாவட்டம், அடுத்த திருப்பாதிரிப்புலியூர் எஸ்.என். சாவடி பகுதியைச் சேர்ந்தவர் சிவசங்கர் (43). இவர் பாமக பிரமுகர். இவர் வீட்டில் இருந்த போது, 2 பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் 5 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.

அதில், பலத்த காயமடைந்த சிவசங்கரை அங்கிருந்தவர்கள் மீட்டு, கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அதை தொடர்ந்து, அவர் தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் அந்த பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், 4 தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டன.

திருவந்திபுரம் அருகே பதுங்கியிருந்த கடலூர் எஸ்.என். சாவடியைச் சேர்ந்த முருகன் மகன் சதீஷ்குமார் (27), ராமசந்திரன் மகன் வெங்கடேசன் (28), மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்த முருகன் மகன் முகிலன் (19),
செம்மண்டலத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி மகன் ராஜ்கிரண் (34) மற்றும் 17 வயது சிறுவன் என மொத்தம் 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாமக பிரமுகர் சிவசங்கரின் தம்பி பிரபு 28.2.2021 அன்று கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கின் முக்கிய சாட்சியாகவும், வழக்கை முன்னின்றும் சிவசங்கர் நடத்தி வருவதால், அவரை கொலை செய்ய முயன்றாக கைதானவர்கள் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.