கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விளிம்புநிலை மக்கள் மீது தாக்குதல் நடத்துவது தடுத்து நிறுத்தப்படவேண்டும் என காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிருஷ்ணகிரி மாவட்டம், சோக்காடி கிராமத்தில் விளிம்புநிலை மக்கள் மீது தாக்குதல் நடத்தியும், அவர்கள் குடியிருப்புகளை தீவைத்துக் கொளுத்தியும் இருக்கிறார்கள். அப்பாவி மக்களின் மீது வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டவர்களின் செயலை வன்மையாகக் கண்டிக்கின்றேன். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விளிம்புநிலை மக்கள் மீது தாக்குதல் நடத்துவது தொடர்கதையாக உள்ளது. இது முற்றிலும் தடுத்து நிறுத்தப்படவேண்டும்.
அ.தி.மு.க.வின் ஒன்றிய செயலாளர் ராஜன் என்பவரும், பஞ்சாயத்து தலைவர் கொடிலா ராமலிங்கம் ஆகிய இருவரும் தாக்குதலில் ஈடுபட்டவர்களில் முக்கியமானவர்கள் என்றும் அப்பகுதியில் வசிப்பவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர். சாதிய மோதலையும், பதற்றத்தையும் உருவாக்க முனைந்துள்ள அனைவரின் மீதும் வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்திட வேண்டும்.
சோக்காடி கிராமத்தில் விளிம்புநிலை மக்கள் வசிக்கும் பகுதிகளில் அமைதியை பாதுகாக்க மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களை தடுக்கும் விதமாக வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு முகாம்களை அதிகளவில் நடத்தப்படவேண்டும்.

தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்விஷயத்தில் கவனத்தில் கொண்டு தாக்குதலில் ஈடுபட்டவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டுமென்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடும், காயம் அடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ வசதிகளையும் செய்து தர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.