சொத்து குவிப்பு வழக்கு : அமைச்சர் பொன்முடியின் அமைச்சர் பதவிக்கு ஆபத்தா ?

3 Min Read

சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவியின் விடுதலையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், இன்னும் இரண்டு நாட்களில் அதாவது வரும் டிசம்பர் 21-ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறையின் மேல்முறையீட்டு வழக்கில் தண்டனை விவரங்களை அறிவிக்கயுள்ளனர் .

- Advertisement -
Ad imageAd image

அமைச்சர் பொன்முடியின் தண்டனை உறுதி செய்யப்பட்டால் அவரது சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவிக்கு ஆபத்து வரலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் .

வழக்கின் விவரம் :

திமுக கட்சியின் துணை பொதுச்செயலாளர் மற்றும் உயர் கல்வி துறை அமைச்சரான பொன்முடி கடந்த 1996-2001 திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்தார் .

அவர் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த அந்த கால கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.36 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக அவர் மீதும், அவருடைய மனைவி விசாலாட்சி பொன்முடி உள்ளிட்ட குடும்பத்தினர் மீதும் 2011ல் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் இந்த வழக்கு வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு , விசாரணை நடைபெற்று வந்தது .

இந்த நிலையில் இந்த வழக்கில் குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டப்பட்ட பொன்முடி உள்ளிட்டோரை நிரபராதிகள் என்று வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் தீர்ப்பளித்தது.

வேலூர் நீதிமன்ற இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் விதமாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து இந்த வழக்கினை மறு ஆய்வு விசாரணைக்கு எடுத்தார் . மேலும் பொன்முடி உள்ளிட்ட இந்த வழக்கில் தொடர்பு உடையவர்களையும் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளும் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தற்போது வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டதால் அவருக்கு பதிலாக நீதிபதி ஜெயச்சந்திரன் இந்த வழக்கை விசாரித்து வந்தார் .

லஞ்ச ஒழிப்பு துறையினரால் குற்றம்சாட்டப்பட்ட குறிப்பிட்ட காலகட்டத்தில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பிலான வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நவம்பர் 27 ஆம் தேதி எழுத்து பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டு தீர்ப்பானது தள்ளிவைக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று இந்த வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு அளித்துள்ளார் .

நீதிபதி ஜெயச்சந்திரன் அவரது தீர்ப்பில் , வேலூர் நீதிமன்றம் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோரை விடுதலை செய்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று தீர்ப்பளித்தார் . வழக்கு விசாரணையில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி பொன்முடி தங்களின் வருமானத்தை விட 64.90% அதிகமாக சொத்து சேர்த்து இருப்பது நிரூபணமாகியுள்ளதாக அவரது தீர்ப்பில் தெரிவித்துள்ளார் .

இந்த வழக்கின் தண்டனை விவரங்களை வரும் டிசம்பர் 21-ம் தேதி அறிவிக்க உள்ளதால் பொன்முடி மற்றும் அவரது மனைவி நேரில் அன்றைய தினத்தில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளார் .

அரசியல் வல்லுநர்கள் கருத்து :

இன்று வெளியான தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த அரசியல் வல்லுநர்கள் , அமைச்சர் பொன்முடிக்கு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டால் அவரின் உயர் கல்வித்துறை அமைச்சர் பதவி பறிபோகும் வாய்ப்பு உள்ளதாகவும் .

அதே சமயத்தில் அவரது சிறை தண்டனை காலம் 2 வருடங்களுக்கு மேல் வழங்கப்பட்டால் பொன்முடியின் சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ) பதவியும் உடனடியாக பறிபோகும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர் .

அவரது பதவியை காப்பாற்றிக்கொள்ள உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதே அவருக்கு ஒரே தீர்வாக இருக்கும் என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர் .

Share This Article
Leave a review