தமிழகத்தில் 2006- 2011 திமுக ஆட்சியில் இருந்த போது கனிமவளத் துறை அமைச்சராகவும் இருந்தார் பொன்முடி. அப்போது செம்மண் குவாரிகளில் சட்டவிரோதமாக செம்மண் எடுத்து அரசுக்கு ரூ.28 கோடி இழப்பு ஏற்படுத்தப்பட்டதாக 2012-ல் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு தொடர்ந்தனர். விழுப்புரம் கோர்ட்டில் நடந்து வரும் முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில், அ.தி.மு.க., ஜெயக்குமார் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்யக்கோரி, நேற்று அரசு தரப்பில் வாதிட்டனர்.
தமிழகத்தில் கடந்த 2006 – 2011 ஆம் ஆண்டு நடந்த தி.மு.க., ஆட்சிக்காலத்தில், விழுப்புரம் மாவட்டம், வானுார் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள அரசு செம்மண் குவாரியை, ஏலம் எடுத்து, அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு 28.36 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து, முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி எம்.பி. மற்றும் உறவினர் ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத், லோகநாதன் ஆகியோர் மீது கடந்த 2012 ஆம் ஆண்டில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த செம்மண் குவாரி வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சதானந்தன், ஜெயச்சந்திரன், கோபிநாத் ஆகியோர் ஆஜராகினர். முன்னாள் அமைச்சர் பொன்முடி, கவுதமசிகாமணி எம்.பி. ராஜமகேந்திரன், கோதகுமார் ஆஜராகவில்லை. இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளும் ஆஜராகவில்லை.
இந்த வழக்கில், (எதிர் தரப்பு ஆளும் கட்சி என்பதால்) அரசு தரப்பு சாட்சிகள், அரசு தரப்புக்கு எதிராக பிறழ் சாட்சியம் அளித்து வருவதால், அரசு தரப்புக்கு உதவியாக செயல்பட தங்களை அனுமதிக்கக்கோரி அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. அப்போது ஆஜரான ஜெயக்குமார் தரப்பு வக்கீல்கள், அரசு தரப்புக்கு உதவியாக விசாரணைக்கு தங்களை அனுமதிக்க கோரி வாதிட்டனர். அப்போது, அரசு தரப்பு வக்கீல் ஆஜராகி, இந்த வழக்கில் ஜெயக்குமார் தொடர்பில்லாதவர், பாதிக்கப்பட்டவரும் கிடையாது, அவர் விழுப்புரத்தை சேர்ந்தவரும் இல்லை.

செம்மண் குவாரி வழக்கில் புகார் உள்ள இடத்தில் அவருக்கு நிலமும் இல்லை என்று கூறி, ஜெயக்குமார் மனுவை தள்ளுபடி செய்திட வாதிட்டார். இதேவாதத்தை, பொன்முடி தரப்பு வக்கீல்களும் முன்வைத்தனர். முத்தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பூர்ணிமா, வழக்கு விசாரணையை வரும் 6 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.