தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை துரிதப்படுத்த கூடுதலாக 4 அமைச்சர்களை நியமித்து முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை;
தமிழகத்தில் குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. கனமழை முதல் அதிக கனமழை காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களில் இருந்து அவர்களை மீட்கவும், அவர்களுக்கு தேவையான அடிப்படை உதவிகளை உடனடியாக வழங்கிடவும், தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

தமிழத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்கு அவசர கால உதவிகளை வழங்கிடவும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ் ஆர். ராமச்சந்திரன் நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன், மீன் வளம் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகிய அமைச்சர்கள் உடனடியாக அனுப்பப்பட்டு அவர்கள் மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் எம்.பிகள், கனிமொழி, ஞான திரவியம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை மேலும் துரிதப்படுத்தி பணிகளை விரிவுபடுத்த கூடுதலாக பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ வேலு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ் ராஜ கண்ணப்பன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி ஆகிய அமைச்சர்களை முதல்வர் மு.க ஸ்டாலின் நியமித்துள்ளார். மேலும் கனமழையால் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ள பொதுமக்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தேவைப்படும் நிவாரண உதவிகள், மருத்துவ உதவிகள், மீட்பு நடவடிக்கைகள் குறித்து சமூக வலைத்தளத்தின் மூலம் தமிழ்நாடு அரசின் வாட்ஸ் அப் எண் மற்றும் ட்விட்டர் பதிவுகளை பொதுமக்கள் தெரிவிக்குமாறு தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.