சென்னை நொளம்பூர் குருசாமி தெருவை சேர்ந்தவர் பழனி (59). இவர் 1995 ஆம் ஆண்டு மருத்துவ அலுவலராக தனது பணியை தொடங்கினார். பிறகு சுகாதாரத்துறையில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வந்தார். தற்போது எழும்பூர் குடும்ப நல பயிற்சி நிறுவன முதல்வராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 2019 முதல் 2021 ஆம் ஆண்டு வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் துணை இயக்குநராகப் பணியாற்றிய போது, அவரது அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.2,02,300 ரொக்கத்தை கைப்பற்றினர்.

அதை தொடர்ந்து, நொளம்பூர் குருசாமி தெருவில் உள்ள அவரது 3 மாடி வீட்டில் ரூ.3,22,900 ரொக்கம் மற்றும் லாக்கர் சாவிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுதவிர, பழனி மற்றும் அவரது மனைவி ஆகியோர் பெயரில் முகப்பேர் மேற்கு ஐசிஐசிஐ வங்கி லாக்கர் திறக்கப்பட்டு சோதனை செய்த போது, அதில் கணக்கில் வராத ரூ.29,80,500 ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பான நடத்திய விசாரணையில், பழனி நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் என்றும், அவரது தந்தை கதிர்வேல் கொத்தனாராக இருந்தவர் என்றும் தெரியவந்தது. இந்த நிலையில் பழனி தனது 2 பிள்ளைகளுக்கு மட்டும் கல்விக் கட்டணமாக ஒவ்வோர் ஆண்டும் ரூ.21 லட்சத்தை கட்டி வந்துள்ளார்.
அப்போது பழனி மட்டுமே சம்பாதிக்கிறார். அவரது மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் யாரும் சாம்பாதிக்கவில்லை. இந்த நிலையில் அவரது மனைவி பெயரிலும் பல கோடி மதிப்புள்ள சொத்துகளை சேர்த்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த 2017 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் ஆவணங்கள் மற்றும் பதிவு கட்டணங்களுக்காக செலவழிக்கப்பட்ட தொகையைத் தவிர்த்து பழனி தனது வருமானத்தை மீறி ரூ.1 கோடியே 79 லட்சத்து 94 ஆயிரத்து 977 மதிப்பிலான சொத்துகளை குவித்தது விசாரணையில் உறுதியாகி உள்ளது.
இதன்மூலம், குற்றம் சாட்டப்பட்ட பழனி சட்டவிரோதமாக தனது பதவியை தவறாக பயன்டுத்தி குற்றம் செய்துள்ளதாக தெரியவந்தது.

அதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் கீதா, தற்போது பழனி மற்றும் அவரது மனைவி பரிமளா ஆகியோர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்தார்.
அதன்படி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தலைமையிலான போலீசார் நொளம்பூரில் உள்ள பழனி வீட்டில் நேற்று திடீரென சோதனை நடத்தி சொத்து ஆவணங்கள், ரொக்கப் பணம், தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள், வங்கி லாக்கர்கள் சாவிகள், லேப்டாப் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.