ஆண்டிபட்டி அருகே பால் ஏற்றி வந்த வேன் ஒன்று தேசிய நெடுஞ்சாலை ஓரம் அமைந்திருந்த பிரதான மின்கம்பம் மீது மோதி கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானதில் மின்கம்பம் உடைந்ததால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் பாதிப்பு ஏற்பட்டது.
வேனில் ஏற்றி வந்த 27 கேன்களில் இருந்த நூற்றுக்கணக்கான லிட்டர் பசும்பால் சாலையில் கொட்டி வீணானது.

தேனி மாவட்டம், அடுத்த ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள ராமலிங்கபுரம் பகுதியில் இருந்து 27 கேன்களில் பசும்பால் ஏற்றிக்கொண்டு ஆண்டிபட்டி அருகே உள்ள பால் பண்ணைக்கு வந்த மினி வேன் ஒன்று சண்முகசுந்தரபுரம் கிராமத்திற்கு முன்பு தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது,

திடீரென்று எதிர்பாராத விதமாக தடுமாறி சாலையோரம் அமைந்திருந்த பிரதான மின்கம்பத்தின் மீது மோதி கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. அந்த வேனை ஓட்டி வந்த நபருக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில், வேன் மோதியதில் சேதமடைந்த பிரதான மின்கம்பம் மூன்றாக உடைந்தது.

அப்போது மின் கம்பத்தில் இருந்த மின் ஒயர்கள் அறுந்து விழுந்ததால், சண்முகசுந்தரபுரம், ரெங்கநாதபுரம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம பகுதிகளுக்கு செல்லக்கூடிய மின்சாரம் தடைப்பட்டது.
அப்போது வேனில் ஏற்றி வந்த 27 கேன்களில் இருந்த நூற்றுக்கணக்கான லிட்டர் பசும்பால் விபத்தால் சாலையில் கொட்டி வீணானது.

இந்த விபத்து குறித்து ஆண்டிபட்டி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏறபடுத்தி உள்ளது.