ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் பஸ் யாத்திரையில் ஈடுபட்ட போது அவர் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆந்திராவில் மக்களவை தேர்தலுடன், சட்டப்பேரவை தேர்தலும் ஒரே கட்டமாக மே 13 ஆம் தேதி நடக்க உள்ளது. இதனையொட்டி அப்போது கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிடும் முதல்வர் ஜெகன்மோகன், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

இதற்காக அதிநவீன வசதிகளுடன் கூடிய சொகுசு பஸ்சை அவர் பயன்படுத்தி வருகிறார். அப்போது நேற்று முன்தினம் மாலை அனந்தபுரம் மாவட்டம், குத்திநகர் பஸ் நிலையம் அருகே தனது சொகுசு பஸ் மீது நின்றபடி தேர்தல் பிரசாரம் செய்தார்.
அப்போது அந்த கூட்டத்தில் இருந்த ஒருவர் திடீரென ஜெகன்மோகன் மீது செருப்பை வீசினார். அது முதல்வர் அருகே இருந்த பாதுகாவலர்கள் மீது பட்டு கீழே விழுந்தது. இந்த சம்பவத்தால் அங்கிருந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனால் அந்த கூட்டத்தில் சிறிதுநேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த வீடியோவை தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள் சிலர் பகிர்ந்து வருகின்றனர்.
அதில் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் ஜெகன்மோகன் மீது செருப்பு வீசி வரவேற்கும் மக்கள்’ என கிண்டல் செய்து பகிர்ந்து வருகின்றனர். ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை நோக்கி மர்ம நபர் ஒருவர் செருப்பு வீசிய சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.