காசா மீது இஸ்ரேல் போரை நீட்டித்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவது மனிதாபிமான குற்றச்செயல் என ஐநா தலைவர்கள் கூறியுள்ளனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் தேதியன்று தொடங்கிய இஸ்ரேல் – காசா போர் தற்போது வரை சுமார் 30,000 பேரின் உயிரை எடுத்திருக்கிறது. போரை தடுக்க ஐநா பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோதும், இஸ்ரேல் அதை மதிக்கவில்லை.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் போர் நிறுத்த தீர்மானம் முன்மொழியப்படும் போது, அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிடும். இந்த நிலையில், இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவது மனிதாபிமான குற்றம் என ஐநா தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.
பிரிட்டனை சேர்ந்த ராணுவ ஆய்வாளரான சீன் பெல் சமீபத்தில் வெளியிட்டிருந்த சில தகவல்கள் தான், ஐநா தலைவர்களின் விமர்சனத்திற்கு முக்கிய காரணம். அதாவது, கடந்த ஆண்டு மட்டும் இஸ்ரேலுக்கு அமெரிக்கா சுமார் ரூ.7,500 கோடி மதிப்பிலான ஆயுதங்களை வழங்கியுள்ளதாக சீன் பெல் கூறியுள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஹமாஸை அழிக்கும் வரை போர் ஓயாது என்று கூறியிருக்கிறார். அவருக்கு உதவும் வகையில் அமெரிக்கா தொடர்ந்து ஆயுதங்களை சப்ளை செய்து வருவது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. பகீர் போர் காசா மக்களுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
பாலஸ்தீனத்திற்கு அண்டை நாடாக இருக்கும் எகிப்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எகிப்து நாட்டின் முக்கிய வருவாய் கடல்வழி வாணிபம் தான். ஆனால் போர் காரணமாக இது கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

மறுபுறம் அமெரிக்க டாலருக்கு நிகரான எகிப்து ரூபாயின் மதிப்பும் சரிந்துக்கொண்டே வருகிறது. மட்டுமல்லாது, எகிப்தின் ராஃபா எல்லையில், காசா மக்கள் அகதிகளாக குவிந்திருப்பதால் அவர்களை பராமரிக்க வேண்டிய பொறுப்பும் எகிப்து தலையில் வந்து விடிய இருக்கிறது.
அதேபோல இந்த போரில் ஈரானும் நுழைந்திருப்பதால், மத்திய தரைக்கடல் நாடுகள் முழுவதும் போரில் மறைமுகமாக பங்கெடுத்துள்ளன. இது சர்வதேச அளவில் வளர்ந்து வரும் நாடுகளையும் பாதிக்கும். எனவே போரை உடனடியாக நிறுத்த வேண்டிய அவசியம் எழுந்திருக்கிறது.

இதற்கு அமெரிக்க ஒத்துழைக்க வேண்டும். பாலஸ்தீனத்திற்காக இஸ்ரேல் ஆக்கிரமிப்பு முயற்சிகளை மேற்கொள்வதும், அதற்கு எதிராக ஹமாஸ் பயங்கரவாத தாக்குதலை தொடுப்பதும் அடிக்கடி நடந்து வரும் சம்பவங்கள் தான்.

இந்த மோதல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில் சீரியஸானது. அதாவது ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது ராக்கெட்களை ஏவி 1,400 பேரை கொல்ல, இஸ்ரேல் கண்மூடித்தனமான பதில் தாக்குதலில் இறங்கியது.