விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்ற நபர் போலீசார் தாக்கியதால் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு, உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
உயர்நீதிமன்றம் 8 நாட்களுக்குள் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவு விடுத்துள்ள நிலையில், இன்று மருத்துவர்கள் குழு மறு பிரேத பரிசோதனை செய்ய ஆயுதமாக்கி உள்ளனர்.

விழுப்புரம் ஜி.ஆர்.பி தெருவில் வசித்து வந்தவர் ராஜா வயது 43. இவருக்கு அஞ்சு என்கிற மனைவியும் 2 ஆண் பிள்ளைகளும் ஒரு பெண் பிள்ளையும் இருந்து வருகின்றனர். ராஜா தனது மூத்த மகனுடன் விழுப்புரம் அருகே உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் இயங்கும் கேண்டினில் வேலை செய்து வந்துள்ளார்.
கடந்த மாதம் 10 ஆம் தேதி வழக்கம் போல இரவு வேலை முடித்து விட்டு ராஜா கேண்டினிலே படுத்து உறங்கி உள்ளார். அங்கு ரோந்து பணி ஈடுபட்ட தாலுகா போலீசார் காலை 7.30 மணி அளவில் டாஸ்மாக் கேண்டினில் படுத்து உறங்கிய ராஜாவை சந்தேகத்தின் பேரில் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.

பிறகு ராஜாவை காவல் நிலையத்தில் வைத்து சரமாரியாக தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் ராஜா 10 மது பாட்டில்களை வைத்துக் கொண்டு வியாபாரம் செய்ததாக ஒரு வழக்கு பதிவு செய்து, சொந்த ஜாமினில் விட்டுள்ளனர் விழுப்புரம் தாலுகா போலீசார்.
காலை 10.30 மணி அளவில் வீட்டிற்கு வந்த ராஜா தொடர்ந்து தன்னை போலீசார் பூட்ஸ் கால்களால் தாக்கியதாகவும், அதனால் நெஞ்சு பகுதியில் அதிகமாக வலி இருப்பதாகவும் மனைவி அஞ்சுவிடம் சொல்லியிருக்கிறார்.
உடனடியாக அவர்கள் ராஜாவை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துவமனையில் மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் ராஜா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

அதன்பிறகு அருகில் உள்ள காவல் நிலையம் ஆன மேற்கு காவல் நிலையத்தில் ராஜாவின் மனைவி அஞ்சுவை காவலர்கள் அழைத்து தன் கணவர் வீட்டிலே இறந்து விட்டதாக ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தை பெற்றுள்ளனர்.
அதன் பின்னர் அவசர அவசரமாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ராஜாவின் உடலை எடுத்துச் சென்று, ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே பிரேத பரிசோதனை செய்து இருக்கின்றனர்.
இதுவெல்லாம் போலீசாரின் தூண்டுதலின் பேரில் நடைபெற்றதாக சந்தேகம் அடைந்த ராஜாவின் மனைவி நீதிமன்றத்தை நாட முடிவு செய்திருந்தார். இதை அறிந்து கொண்ட போலீசார் ராஜாவின் உடலை எரிக்க வேண்டும் என்று மிரட்டி உள்ளனர்.

ராஜாவின் மனைவி அஞ்சு உறவினர்கள் ஒப்புதலோடு விழுப்புரம் ஈடுகாட்டில் ராஜாவின் உடலை புதைத்துள்ளார். பின்னர் மதுரையில் இயங்கி வரும் மக்கள் கண்காணிப்பகத்தை நாடிய ராஜா மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்துள்ளார்.
அதில் தன் கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் காவல் நிலையத்தில் வைத்து கணவரை தாக்கியதால் தான் அவர் உயிரிழந்தார் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜாவின் உடலை 8 நாட்களுக்குள் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் அதுவும் திருச்சி, மதுரை, நெல்லையில் உள்ள மருத்துவர்கள் கொண்டு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும்,

இறந்து 40 நாட்கள் ஆன நிலையில் உள்ள ராஜாவின் உடலை முழுவதுமாக ஸ்கேன் செய்ய வேண்டும் என்றும் அந்த உத்தரவில் நீதிபதி தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து இன்னும் 8 நாட்களுக்குள் ராஜாவின் உடல் தோண்டப்பட்டு, பிரேத பரிசோதனை நடைபெற வேண்டும் என்று உத்தரவிட்ட நிலையில் இன்று உடலை தோண்டி மீண்டும் மறு பிறவி பரிசோதனை நடைபெற்று வருகிறது.

பிரேத பரிசோதனையின் போது விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி நீதித்துறை நடுவர் நீதி ராதிகா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முன்னிலையில் சென்னை மதுரையைச் சேர்ந்த மருத்துவர்கள் பிரேத பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரேத பரிசோதனை நடைபெறும் இடத்தில் ராஜாவின் குடும்பத்தினர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பின்னரே ராஜா போலீசார் அடித்ததால் கொல்லப்பட்டாரா என்பது குறித்து முழு விபரம் தெரியவரும் என்று சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறப்படுகிறது.