தமிழ்நாட்டில் பெரியபாளையம், பவானியம்மன் கோயில், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி, ஆனை மலை மாசாணியம்மன் கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்து உள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில் 2023 – 2024-கான இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையில், நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் 8 கோயில்களில் நடந்து வருகிறது.

இந்த திட்டம் தற்போது விரிவுபடுத்தப்பட்டு, திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், பெரியபாளையம் பவானியம்மன் கோயில், விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டம், ஆனைமலை மாசாணியம்மன் கோயில் ஆகிய மூன்று கோயில்களில் நடைமுறைப் படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, இந்த மூன்று கோயில்களிலும் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ், பக்தர்களுக்கு காலை 8 மணி முதல் இரவு 10 மணிவரை அன்னதானம் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். அப்போது கோயில்களில் தயாரிக்கப்படும் அன்னதானம் மற்றும் பிரசாதம் தரத்துடனும், சுகாதாரமான முறையிலும் தயாரிக்கப்படுவதை உறுதி செய்ய இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையத்தால் வழங்கப்படும்.

இதனால் உணவு தர பாதுகாப்புச் சான்றிதழை 523 கோயில்கள் பெற்று, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆர். காந்தி, பி.கே. சேகர்பாபு, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலைத்துறை செயலாளர் மணிவாசன், அறநிலைத்துறை சிறப்புப்பணி அலுவலர் குமரகுருபரன், ஆணையர் முரளீதரன், கூடுதல் ஆணையர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த காணொலிக் காட்சி வாயிலாக, பெரியபாளையத்தில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் கோவிந்த ராஜன், திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோரும், ஆனைமலையில் இருந்து கோயம்புத்தூர் கலெக்டர் தலைவர் கிராந்திகுமார் பாடி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோரும், மேல்மலையனூரில் இருந்து உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.