பாஜக பூனையின் உருட்டலுக்கு அதிமுக என்ற புலி பயப்படாது’ என்று அதிமுக சார்பில் ஓட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. பாஜக கட்சியின் மாநில பொதுச்செயலாளராக ராம.சீனிவாசன் உள்ளார்.
பாஜக உடன் அதிமுக கூட்டணிக்கு வரவில்லை என்றால் பெரிய விலை கொடுக்க நேரிடும் என்று மிரட்டல் விடுத்த பாஜக பொதுச்செயலாளர் ராம சீனிவாசனை கண்டித்து சிவகங்கையில் அதிமுகவினர் போஸ்டர் ஒட்டி உள்ளனர். அண்மையில் பேட்டியளித்த ராம. சீனிவாசன் பாஜகவினர் அதிமுகவினரை சாதாரணமாக கருதுவதாகவும், ஆனால் பாஜக அப்படி இல்லை என்பதை தேர்தலுக்கு பின் தெரிந்து கொள்வார்கள் என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.

அதிமுக தங்களுடன் கூட்டணிக்கு வரவில்லை என்றால் பெரிய விலை கொடுக்க நேரிடும் என்று எச்சரித்த அவர் பின் நாளில் அரசியல் ரீதியாக மிகவும் வருத்தப்படுவார்கள் என்று எச்சரித்து இருந்தார். இவர் சில தினங்களுக்கு முன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், ‘பாஜக கூட்டணியை விட்டு வெளியேறிய அதிமுக வரும் நாடாளுமன்ற தேர்தலில் பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும். தேர்தலுக்கு பின் அவர்கள் வருத்தப்பட நேரிடும் என எச்சரிக்கும் விதமாக பேசி இருந்தார்.
பாஜக நிர்வாகியின் இந்த பேச்சு அதிமுகவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சிவகங்கை மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி துணை செயலாளர் மணிமாறன் என்பவர், சிவகங்கை, திருப்புவனம், மணலூர், உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பாஜகவை கண்டித்து போஸ்டர் ஒட்டியுள்ளார். அதில், ‘‘பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம. சீனிவாசனை கடுமையாக எச்சரிக்கிறேன்.

பாஜக எனும் பூனையின் உருட்டலுக்கு எலி வேண்டும் என்றால் பயப்படலாம். அதிமுக என்னும் புலி பயப்படாது’’ என அச்சிடப்பட்டிருந்தது. எடப்பாடி பழனிசாமி தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் தமிழ்நாட்டில் உள்ள 13 விழுக்காடு சிறுபான்மையினர் வாக்குகளில் 1% வாங்குவதே பெரிய விஷயம் என்று ராம சீனிவாசன் கூறியிருந்தார்.
மேலும் 2019, 2021 தேர்தல்களில் பாஜக உடன் கூட்டணி வைத்து கொண்டு இப்போது பசுந்தோள் போர்த்திய புலி போல போனால் நம்பிவிட மக்கள் முட்டாள் இல்லை என்றும் அதிமுகவை அவர் விமர்சித்திருந்தார். இந்த நிலையில், ராம சீனிவாசன் பாஜகவை கண்டித்து சிவகங்கை மாவட்டம் திருபுவனம், மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளில் அதிமுகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.அதில் பாஜக எனும் பூனையின் உருட்டலுக்கு எலி வேண்டும் என்றால் பயப்படலாம் அதிமுக எனும் புலி பயப்படாது என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன் பாஜக மற்றும் அண்ணாமலையை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் விமர்சித்து இருந்த நிலையில், தற்போது பாஜகவை கண்டு அதிமுக பயப்படாது என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது என பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.