இலங்கையிலிருந்து கொண்டுசெல்லப்படும் குரங்குகள் இறைச்சிக்கு பயன்படுத்தப்படும் என கூறப்படுகின்ற கருத்தை இலங்கை வேளாண் துறை மந்திரி மகிந்தா அமரவீர முற்றிலும் நிராகரித்தார்.
இலங்கையிலுள்ள குரங்கொன்றை பிடிப்பது முதல், அதனை சீனாவிற்கு கொண்டு செல்வது வரையான அனைத்து செலவீனங்களையும் சீனாவே ஏற்றுக்கொள்கின்றது என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
நாட்டிற்குள் குரங்கொன்றை பிடிப்பதற்காக மட்டும் சுமார் 5000 இலங்கை ரூபா, சீனாவினால் செலவிடப்படவுள்ளது.

அத்துடன், குரங்குகளை பிடித்து, அதனை தனிமைப்படுத்தி, நோய்கள் ஏதேனும் காணப்படுகின்றனவா என்பது தொடர்பில் ஆராய்ந்து, கூடுகளில் அடைத்து, சீனாவிற்கு கொண்டு செல்வதற்கான முழு செலவினத்தையும் சீனாவே ஏற்றுக்கொள்ளும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார். அவ்வாறாயினும், இலங்கை குரங்கொன்றிற்காக சுமார் 30,000 முதல் 50,000 இலங்கை ரூபா வரை சீனா செலவிட எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் மேலும் கூறினார்.
இலங்கையிலிருந்து கொண்டு செல்லும் குரங்கிற்கு 50,000 ரூபா வரை செலவிடும் சீனா, அந்த குரங்கை இறைச்சிக்காக பயன்படுத்துமாயின், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் லாபம் வைத்து ஒரு லட்சம் ரூபாயாக விற்க வேண்டும்.
அதே சமயம் ஒரு லட்சம் ரூபாவை செலவிட்டு, குரங்குகளை சீனர்கள் உட்கொள்ளமாட்டார்கள் எனவும் அமைச்சர் மகிந்தா அமரவீர கூறினார்.
இதேவேளை, விவசாய நிலங்களுக்கு சேதம் விளைவிக்கும் குரங்குகள் உள்ளிட்ட 6 வகையான உயிரினங்களை கொல்வதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன.