நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி உடையும். அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்று முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஏழாம் ஆண்டு நினைவு தினம் டிசம்பர் 5 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆகிய ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்க உள்ளனர். இந்த நிகழ்வுக்கு போலீஸ் அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்டு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டி. ஜெயக்குமார் நேற்று மனு அளித்தார்.

அப்போது மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, விருகை ரவி, ஆர்.எஸ். ராஜேஷ், கே.பி. கந்தன் ஆகியோர் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர். பின்னர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்து கூறுகையில்; அ.தி.மு.க. கட்சி வலுவாக உள்ளது. பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சியை சிறப்பாக வழி நடத்தி வருகிறார். அ.தி.மு.க. கட்சி எழுச்சியாக உள்ளது. தி.மு.க.வுக்கு எதிர்ப்பு அலை உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் எங்களை மீண்டும் நாடாளுமன்றத்திற்கு அனுப்ப தயாராகி விட்டார்கள். பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமையும். பாரதிய ஜனதாவுடன் எப்போதும் கூட்டணி இல்லை.

தேர்தலுக்கு இன்னும் 3, 4 மாதங்கள் தான் இருக்கக்கூடிய நிலையில், அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமையும். தி.மு.க. கூட்டணியில் இருந்து பிரிக்க முடியாத கட்சியாக யாரும் இல்லை. மாறுபட்ட கொள்கை உடையவர்கள் தான் அங்கே உள்ளனர். தி.மு.க.வுடன் சென்றால் நிலைமை மோசமாகி விடும் என்பதால் தேர்தல் நெருங்க, நெருங்க திமுக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க.வுக்கு வருவதற்கு கண்டிப்பாக வாய்ப்புகள் உள்ளது. அமலாக்கத்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை என எந்த துறை வந்தாலும் அஞ்சாத இயக்கம் அ.தி.மு.க. இவ்வாறு அவர் கூறினார்.