அபுதாபியில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட இந்து கோயிலை பிரதமர் மோடி வரும் 14 ஆம் தேதி திறந்து வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் பிரம்மாண்டமாக திறக்கப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 14 அன்று அபுதாபியில் BAPS இந்து மந்திரை திறந்து வைக்க உள்ளார். ஒரு நாள் முன்னதாக, பிரதமர் அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்போர்ட்ஸ் ஸ்டேடியத்தில் புலம்பெயர்ந்த இந்தியர்களிடையே உரையாற்றுவார். இதில் கிட்டத்தட்ட 50,000 பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “அஹ்லான் மோடி (ஹலோ மோடி)” என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வு, வெளிநாடுகளில் இந்தியப் பிரதமருக்கு மிகப்பெரிய சமூக வரவேற்பு” எனக் கூறப்படுகிறது.

மேலும் 2023 டிசம்பரில் கோவிலை திறப்பதற்கான அழைப்பை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். செய்திக்குறிப்பின்படி, BAPS சுவாமி நாராயண் சன்ஸ்தாவின் மூத்த சுவாமியான பூஜ்ய சுவாமி ஈஸ்வர்சரந்தாஸ், மோடிக்கு அதிகாரப்பூர்வ அழைப்பை வழங்கினார். BAPS என்பது போச்சசன்வாசி ஸ்ரீ அக்ஷர் புருஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்தாவைக் குறிக்கிறது. அதன் இணையதளத்தின்படி, இது 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பகவான் ஸ்வாமிநாராயண் (1781-1830) அவர்களால் முன்னோடியாகவும், 1907 ஆம் ஆண்டில் சாஸ்திரிஜி மகாராஜால் (1865-1951) நிறுவப்பட்ட “வேதங்களில் அதன் வேர்களைக் கொண்ட சமூக ஆன்மீக இந்து நம்பிக்கை” ஆகும்.
பிரதமர் மோடி வரும் 13 மற்றும் 14 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், பிரதமர் மோடியை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் அங்கு தடபுடலாக நடக்கின்றன. அப்போது பயணத்தின் முதல் நாளான 13 ஆம் தேதி அபுதாபி ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெறும் அஹ்லான் மோடி (ஹலோ மோடி) எனும் நிகழ்ச்சியில் இந்திய சமூகத்தினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். இதில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பங்கேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அதைத் தொடர்ந்து, 14-ம் தேதி அபுதாபி அருகே முரேகாவில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட இந்து கோயிலை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். 27 ஏக்கரில் ரூ.888 கோடி செலவில் கட்டப்படும் இக்கோயில் அபுதாபியில் கட்டப்படும் முதல் இந்து கோயிலாகும். உலகம் முழுவதும் சுமார் 1,200 இந்து கோயில்களை நிறுவி, பராமரித்து வரும் பாப்ஸ் (பிஏபிஎஸ்) அமைப்பு அபுதாபி கோயிலை கட்டி வருகிறது. இக்கோயிலில் கிருஷ்ணன், சிவன், ஐயப்பனின் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. இக்கோயில் கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன.