தேனி மாவட்ட அதிமுக மாவட்ட அலுவலகத்தை அமமுகவினர் கைப்பற்றி கூட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேனி அருகே பழனிசெட்டிபட்டியில், போடி ரோட்டில் அதிமுகவின் மாவட்ட கட்சி அலுவலகம் உள்ளது. அங்கு கட்சி கூட்டங்கள், நிர்வாகிகள் கூட்டம், முக்கிய ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன. பின்னர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா, எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி.தினகரன் ஆகியோர் ஒரு அணியிலும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மற்றொரு அணியாகவும் செயல்பட்டனர்.
மேலும் சசிகலா, எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வசமிருந்த இந்த அலுவலகத்தை திறக்கக்கூடாது என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பெரியகுளம் கோட்டாட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அலுவலகத்தை யாரும் பயன்படுத்தக் கூடாது என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.

பின்னர் சசிகலாவும், டி.டி.வி.தினகரனும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும், ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டனர். அப்போது இந்த அலுவலகம் சசிகலா, டி.டி.வி.தினகரன் மற்றும் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்து வந்த பூங்குன்றன் ஆகியோரை டிரஸ்டியாக கொண்ட கமிட்டி பெயரில் இருப்பதாகவும், அதிமுகவினர் யாரும் செல்லக்கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது. இதனால் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக இக்கட்டிடம் செயல்பாடின்றி கிடந்தது. தற்போது டி.டி.வி.தினகரனும், ஓ.பன்னீர்செல்வமும் ஒன்றிணைந்து செயல்பட உள்ளதாக அறிவித்துள்ளனர். அதனால் இந்த அலுவலகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர அமமுகவினர் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முடிவு செய்தனர்.
இதனை தொடர்ந்து தேனி தெற்கு மாவட்ட அமமுகவினர், பிரச்சினைக்குரிய இந்த மாவட்ட தலைமை அலுவலகத்திற்குள் நேற்று திடீரென வந்தனர். அங்கிருந்த எம்ஜிஆர் சிலைக்கு மாலையணிவித்தனர். பின்னர், அதிமுக அலுவலகத்தை திறந்து உள்ளே சென்றனர். பின்னர் அங்கு போடி தொகுதி அமமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தெற்கு மாவட்ட அமமுக செயலாளர் முத்துச்சாமி தலைமையில் நடந்த அந்த கூட்டத்தில் போடி, கம்பம் சட்டமன்ற தொகுதி அமமுகவினர் கலந்து கொண்டனர். தற்போது அதிமுக மாவட்ட அலுவலகத்தில் அமமுகவினர் கூட்டம் நடத்தியதால் அம்மாவட்ட அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தேனி தெற்கு மாவட்ட அமமுக செயலாளர் முத்துச்சாமி, ‘இந்த கட்டிடம் டி.டி.வி தினகரன் மற்றும் பூங்குன்றன் தரப்பில் உள்ளதற்கான ஆவணங்களை கோட்டாட்சியரிடம் ஒப்படைத்தோம்.

அதனையடுத்து எங்கள் தரப்பினர் அலுவலகத்தை பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளார். அதனால் இது குறித்து தேனி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.டி.கே.ஜக்கையன், ‘அலுவலக வளாகத்திற்குள் அமமுகவினர் அத்துமீறி நுழைந்தது குறித்து கலெக்டரை சந்தித்து புகார் அளிக்க முடிவு செய்துள்ளோம்” என்றார். இந்த விவகாரம் தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.