கோவை அருகே வாக்கிங் செல்வதற்காக வீட்டில் இருந்து வெளியே வந்த தம்பதி காட்டு யானையை பார்த்ததும் பதறி அடித்துக் கொண்டு வீட்டுக்குள் ஓடிய சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம், அடுத்த மருதமலை ஒட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சுமார் 11 காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. இந்த காட்டு யானைகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி இரவு நேரங்களில் ஊருக்குள் வலம் வருவதும்,

யானைகளை வனத்துறையினர் மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் சனிக்கிழமை இரவு மருதமலை அருகே பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு அருகே உள்ள குடியிருப்பில் வாக்கிங் செல்வதற்காக தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வந்து உள்ளனர்.

அப்போது அங்கு உணவு மற்றும் தண்ணீர் தேடி உலா வந்த ஆண் காட்டு யானை ஒன்று அவர்களை வீட்டின் கேட் வரை விரட்டிய நிலையில், அச்சமடைந்த இருவரும் பதறி அடித்துக் கொண்டு வீட்டுக்குள் ஓடினர்.
இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி, வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.