மரக்காணம் பேரூராட்சிக்குட்பட்ட அழகன்குப்பம் மீனவர் பகுதியை சேர்ந்தவர் பழனி வயது (60). இவர் அதிமுக கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட மீனவர் அணி மாவட்ட செயலாளராக உள்ளார். இவர் தற்போது மரக்காணம் சால்ட் ரோட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகன் நவநீதகிருஷ்ணன் வயது (27). இவர் மரக்காணத்தில் செல்போன் சர்வீஸ் செய்யும் கடை வைத்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன் நவநீதகிருஷ்ணன் வழக்கம் போல் தனது கடையை மூடிவிட்டு பைக்கில் அவரது தந்தை பழனியுடன் மரக்காணம் சால்ட் ரோட்டில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் மோட்டார் பைக்கில் வந்து, இவர்கள் இருவரையும் சரமாரியாக துரத்தி துரத்தி கத்தியால் வெட்டி உள்ளனர்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதி திமுக கவுன்சிலரின் கணவர் அமானுல்லா சம்பவ இடத்துக்கு சென்று சம்பவத்தை தடுக்க சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் இவரையும் கத்தியால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
அதில் படுகாயம் அடைந்த 3 பேரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று தற்போது வீடு திரும்பியுள்ளனர். இதுகுறித்து மரக்காணம் போலீசார் வழக்குப்பதிந்து கோட்டக்குப்பம் போலீஸ் டிஎஸ்பி சுனில் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து தப்பியோடிய அடையாளம் தெரியாத நபர்களை ரகசியமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய சிறுவன் ஒருவன் புதுவை மாநிலம் கரிக்கலாம்பாக்கம் பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனை தொடர்ந்து மரக்காணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையிலான தனிப்படை போலீசார் கரிக்கலாம்பாக்கம் பகுதியில் பதுங்கி இருந்த சிறுவனை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணையில் கைது செய்யப்பட்ட சிறுவனோடு வந்த நபர்கள் யார், எதற்காக இவர்களை கத்தியால் வெட்டி கொலை செய்ய முயன்றனர் உள்ளிட்ட பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவரும் என போலீசார் கூறுகின்றனர்.