டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது குழந்தை உயிரிழப்பு! நோய்த்த …

Jothi Narasimman
2 Min Read
அன்புமணி

டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது குழந்தை உயிரிழப்பு அதிர்ச்சியளிக்கிறது. நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில்,”சென்னை மாநகருக்குட்பட்ட மதுரவாயல் பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ரக்‌ஷன் என்ற 4 வயது சிறுவன் மருத்துவம் பயனளிக்காமல் உயிரிழந்து விட்டான் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. சிறுவனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

டெங்கு காய்ச்சல் போன்ற தொற்றும் நோய்களுக்கு ஓர் உயிரைக் கூட பலி கொடுக்கக் கூடாது என்று கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகவே உறுதி எடுத்து வரும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் உயிரிழப்புகள் தொடர்வது மிகுந்த வேதனையளிக்கிறது. சிறுவன் ரக்‌ஷன் உயிரிழந்ததற்கு காரணம் சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறையின் அலட்சியம் தான் காரணம் ஆகும். சென்னை மாநகருக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர், நன்னீர் தேங்குவதற்கு ஆயிரமாயிரம் காரணங்களும், ஆதாரங்களும் உள்ளன. அவற்றை அகற்றவோ, டெங்கு காய்ச்சல் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சென்னை மாநகராட்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் டெங்கு காய்ச்சல் மிக அதிக அளவில் பரவியிருக்கிறது. அது குறித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கும் தெரியவில்லை; டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் என்னென்ன? டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க பொதுமக்கள் தரப்பில் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்? என்பது குறித்து மாநகராட்சியும், சுகாதாரத்துறையும் மக்களுக்கு தெரிவிக்கவில்லை. ஏதேனும் ஒரு பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதா? என மருத்துவ ஆய்வுகளும் மேற்கொள்ளப் படுவதில்லை. அதனால், நோயின் தாக்கத்தை பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் தாமதமாக அறிந்து கொள்வதால் தான் உயிரிழப்பு நேரிடுகிறது. இனியும் உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்.

பொதுமக்களும், அரசு அமைப்புகளும் இணைந்து நீர் தேங்குவதற்கான வாய்ப்புகளை சரி செய்ய வேண்டும். பயன்படுத்தப்படாமல் கிடக்கும் கொள்கலன்கள், வாகனங்களின் டயர்கள், சிரட்டைகள், பூந்தொட்டிகள், வாளிகள் உள்ளிட்டவற்றை அகற்ற உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதை ஒரு சிறப்பு இயக்கமாக நடத்த வேண்டும். பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதியில் தண்ணீர் தேங்கும் வகையில் உள்ள அனைத்துப் பொருட்களையும் அகற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒத்துழைக்க வேண்டும். அதன் மூலம் டெங்கு காய்ச்சலை தடுக்க முடியும்.

டெங்கு காய்ச்சல் குறித்த அறிகுறிகள், அதற்காக மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைகள் குறித்து தமிழக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். டெங்கு காய்ச்சல் தாக்குவதைத் தடுக்க மக்களும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். நில வேம்பு கசாயம் குடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க முடியும். அதேபோல், ரத்த அணுக்கள் குறையும் போது பப்பாளி சாறு அருந்தினால் அடுத்த இரு நாட்களில் ரத்த அணுக்களின் எண்ணிக்கை இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். இத்தகவல்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Share This Article
Leave a review