பாஜக கூட்டணியில் தமாகாவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், ஒரு ராஜ்யசபா சீட்டும் தமாகாவுக்கு ஒதுக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் பாஜகவிடம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் இருந்து வருகிறது. அப்போது ஜி.கே.வாசனுக்கு ராஜ்யசபா சீட்டை அதிமுகவிடம் இருந்து பெற்று தந்ததும் பாஜக தான். இந்த சூழ்நிலையில் தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது.

பாஜகவுக்கும், எங்களுக்கும் இடையே இனி கூட்டணி கிடையாது என்று எடப்பாடி பழனிசாமி அழுத்தம் திருத்தமாக கூறினார். அதை சற்றும் எதிர்பார்க்காத பாஜக தலைமை கூட்டணியில் இணையும் படி அதிமுகவுக்கு பல வகைகளில் அழுத்தம் கொடுத்து பார்த்தது. ஆனால் அதை அதிமுக நிராகரித்து விட்டது.
அப்போது ஜி.கே.வாசனும், பாஜக கூட்டணிக்கு திரும்ப வருமாறும் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

அதிமுக, பாஜக தனித்து போட்டியிடுவதால் ராஜ்யசபா சீட் கொடுத்த அதிமுக உடன் கூட்டணி வைப்பதா அல்லது வாங்கி தந்த பாஜகவுடன் கூட்டணி வைப்பதா என்ற இழுபறியில் தமாகா இருந்தது.
இந்த நிலையில், பாஜக மேலிட தலைவர்கள் நடத்திய பேச்சு வார்த்தையில் தமாகா, பாஜக கூட்டணியில் ஐக்கியமாகி உள்ளது. அதிமுக இல்லாத பாஜக கூட்டணியில் இணைய உதிரி கட்சிகளே யோசித்த நிலையில், முதல் கட்சியாக தமாகா இணைந்தது குறிப்பிடத்தக்கது.

பாமக, தேமுதிக கட்சிகளை எப்படியாவது கூட்டணிக்கு இழுத்து விட வேண்டும் என பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதற்கு இடையே பல்லடத்தில் நேற்று நடைபெற்ற பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கூட்டணி கட்சி தலைவர்களை மேடை ஏற்றி விட வேண்டும் என்று அண்ணாமலை திட்டம் போட்டிருந்தார். ஆனால் பாஜகவுடன் யாரும் கூட்டணி அமைக்க முன்வராததால் அவரது திட்டம் தவிடு பொடியாகிவிட்டது.

இதனால் பாஜகவில் தற்போதுள்ள கட்சிகள் கேட்ட தொகுதிகளை ஒதுக்க தயார் நிலையில் உள்ளது. அதன்படி தமாகா 5 தொகுதிகளுக்கான பட்டியலை கொடுத்துள்ளது. அதில் 3 தொகுதிகளை ஒதுக்கும்படி கேட்டுள்ளது.
டெல்டா பகுதியான மயிலாடுதுறை தொகுதியை என்.ஆர்.நடராஜனுக்கும், கொங்கு மண்டலமான திருப்பூர் தொகுதியை முன்னாள் எம்எல்ஏ விடியல் சேகருக்கும், தென்மாவட்டமான திருநெல்வேலி தொகுதியை மாநில செயலாளர் என்.டி.எஸ்.சார்லசுக்கும் ஒதுக்கி தரும்படி கேட்டுள்ளார்.

இது தவிர ஒரு ராஜ்யசபா சீட்டை தமாகாவுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் பாஜக தலைமையிடம் ஜி.கே.வாசன் வலியுறுத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.