13 வது உலககோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன.
ஆட்டத்தில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும் இலை சுற்றும் முடிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதி ஆட்டத்திற்கு முன்னேறும் வாய்ப்பை பெறும்.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்திருந்தது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு தொடர்ந்து 2 ஆவது வெற்றி கிடைத்துள்ளது. டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வென்றுள்ளது. டாஸ் வென்ற ஆப்கன் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ரஹ்மானுல்லா குர்பாஸ் 21 ரன்னும், இப்ராகிம் சத்ரான் 22 ரன்களும் எடுத்தனர். அடுத்து வந்த ரஹ்மத் ஷா 16ரன்னில் ஆட்டமிழக்க 63 ரன்னில் ஆப்கன் அணி 3 விக்கெட்டுகளை இழந்தது.
இதன்பின்னர் ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் ஹஷ்மதுல்லாவுடன் அஸ்மதுல்லா ஒமைராசி இணைந்து பொறுப்புடன் விளையாடினார். இந்த இணை 4 ஆவது விக்கெட்டிற்கு 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. ஹஸ்மதுல் 80 ரன்னும், அஸ்மதுல்லா ஒமைராசி 62 ரன்களும் எடுத்தனர். முகமது நபி 19 ரன்னும், ரஷித்கான் 16 ரன்களும் எடுத்தனர். 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த ஆப்கானிஸ்தான் அணி 272 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி சார்பாக பும்ரா 4 விக்கெட்களும், பாண்டியா 2 விக்கெட்களும், தாக்கூர் மற்றும் குல்தீப் தலா 1 விக்கெட்களும் எடுத்தனர்.
இதையடுத்து 273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 35 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. கேப்டன் ரோஹித் சர்மா 84 பந்துகளில் 5 சிக்சர் மற்றும் 16 பவுண்டரியுடன் 131 ரன்கள் குவித்தார். இஷான் கிஷன் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். விராட் கோலி 55 ரன்களுடனும், ஷ்ரேயாஸ் ஐயர் 25 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி நான்கு புள்ளியுடன் புள்ளிப்பட்டியலில் இராண்டாம் இடத்திற்க்கு முன்னேறியது, நான்கு புள்ளியுடன் நியூசிலாந்து அணி முதல் இடத்தில் உள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடந்த போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி விமர்சனத்திற்குள்ளான ரோஹித் சர்மா, இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை வெளுத் தெடுத்தார். வெறும் 63 பந்துகளில் சதம் அடித்து தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்தார் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா.
இந்த சதத்தின் மூலம் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா படைத்த சாதனைகள். இந்திய அணிக்காக மிக வேகமாக சதம் அடித்த வீரர் மற்றும் சர்வதேசப் போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்றும் சாதனை படைத்துள்ளார்.
இதன் மூலம் 1983-இல் கபில் தேவ் நிகழ்த்திய சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் கபில் தேவ் 72 பந்துகளில் சதம் அடித்திருந்தார். அந்த ரெக்கார்ட் தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.