ஆந்திராவில் இருந்து தஞ்சாவூருக்கு 25 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த 2 பேரை வல்லம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். போலீசார் 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.

திருச்சியில் இருந்து தஞ்சாவூருக்கு கஞ்சா கடத்தப்படுவதாக வல்லம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து வல்லம் டி.எஸ்.பி நித்யா உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்- இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது தஞ்சாவூர் – திருச்சி நெடுஞ்சாலையில் வல்லம் பிரிவு சாலை அருகில் சந்தேகப்படும்படி நின்றிருந்த ஆண் மற்றும் பெண் ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அதில் இருவரையும் விசாரித்ததில் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால் இருவரையும் வல்லம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் அவர்கள் கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் மணவாளநல்லூரை சேர்ந்த வேல்முருகன் (37) என்பதும், அவருடன் வந்த பெண் தேனி, ஆண்டிப்பட்டி மூலக்கடை பகுதியை சேர்ந்த சோலையம்மாள் (38) என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
பின்னர் அவர்கள் கொண்டு வந்த சாக்குப்பையை போலீசார் சோதனை செய்ததில் அதில் 25 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இந்த கஞ்சாவை ஆந்திராவில் ரயில் மூலம் திருச்சி கொண்டு வந்து திருச்சியில் இருந்து தஞ்சை நாகை வழியாக இலங்கை கடத்தல் இருப்பது தெரியவந்தது.

இதை அடுத்து வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து வேல்முருகன் மற்றும் சோலையம்மாளை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். ஆந்திராவில் இருந்து தஞ்சாவூருக்கு 25 கிலோ கஞ்சா கடத்தல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.