- கடந்த 2010 ஆண்டு மதுரையில் நடந்த என்கவுண்டர் காவல்துறை அதிகாரி வெள்ளத்துரை மீது நடவடிக்கை கோரியும் வழக்கை சிபிஐ க்கு மாற்ற கோரியும் தாக்கல் செய்த மனு.
புகார் குறித்து தமிழக டிஜிபி புதிதாக வழக்கு பதிவு செய்து காவல்துறை கண்காணிப்பாளர் அந்தஸ்திற்கு குறையாத அலுவலரை நியமித்து வழக்கை விசாரணை செய்து 6 மாதங்களுக்குள்ளாக விசாரணையை முடிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. மதுரை நரிமேடு பகுதியைச் சேர்ந்த குருவம்மாள் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் கடந்த 2010 ஆண்டு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், “எனது மகன் முருகன் என்ற கல்லு மண்டையனை கடந்த 2010 ஆம் ஆண்டு மதுரை மாநகர காவல்துறை உதவி ஆணையர் வெள்ளத்துரை, சார்பு ஆய்வாளர் தென்னவன், தலைமை காவலர் கணேசன் ஆகியோர் இனைந்து எனது மகனை சட்டவிரோதமாக சுட்டு கொலை செய்துள்ளனர் . இது தொடர்பாக நான் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேலும் எனது மகன் சட்ட விரோதமாக சுட்டு கொல்லப்பட்ட வழக்கு விசாரணையை சிபிஐ க்கு மாற்றி உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, வழக்கினை தீர்ப்புக்காக ஒத்தி வைத்திருந்தார். இந்நிலையில் இன்று, இந்த விவகாரம் தொடர்பாக டிஜிபி புதிதாக வழக்கு பதிவு செய்து காவல்துறை கண்காணிப்பாளர் அந்தஸ்திற்கு குறையாத அலுவலரை நியமித்து வழக்கை விசாரணை செய்து 6 மாதங்களுக்குள்ளாக விசாரணையை முடிக்க உத்தரவிட்டுள்ளார்.