நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே இருவரைக் கொன்ற சிறுத்தையை, வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பிடிபட்ட சிறுத்தையை முதுமலையில் விட வனத்துறையினர் முடிவு, இதனிடையே உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதி முதுமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ள பகுதியின் அருகே உள்ளது. இதனால் புலி, சிறுத்தை, கரடிகள், யானைகள், மான்கள் ஆகியவை அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி, உணவு மற்றும் குடிநீர் தேடி குடியிருப்பு பகுதிகளின் அருகே சுற்றித்திரிவது வாடிக்கையாக இருந்து வருகிறது. குறிப்பாக கடந்த சில ஆண்டுகளில் சிறுத்தைகளின் எண்ணிக்கை வனப்பகுதியில் அதிகரித்துள்ளதால், கூடலூர், குன்னூர், கோத்தகிரி, உதகை உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 21-ம் தேதி கூடலூர் அடுத்த பிதர்காடு, எலமன்னா பகுதியில் பழங்குடி கிராமத்தை சேர்ந்த சாரதா, துர்கா, வள்ளியம்மா ஆகிய 3 பெண்கள் காலைக்கடன்களை கழிப்பதற்காக வனப்பகுதி அருகேயுள்ள புதர் பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு மறைந்திருந்த சிறுத்தை ஒன்று, மூவரையும் தாக்கியது. அதில் காயமடைந்த மூவரும் கற்களை வீசியதால், சிறுத்தை அங்கிருந்து தப்பிச்சென்றது. இந்நிலையில் காயமடைந்த மூவரையும், வனத்துறையினர் மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதில் சரிதாவிற்கு படுகாயம் ஏற்பட்டிருந்ததால், அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில் ஒரு வார காலத்திற்கும் மேலாக சிகிச்சையில் இருந்து வந்த சாரதா, சிகிச்சை பலனின்றி கடந்த 29-ம் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவம் கூடலூர் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 3 பெண்களை சிறுத்தை தாக்கியதில் ஒரு பெண் இறந்த நிலையில் சிறுமியை திரும்ப தாக்கிய சிறுத்தை.
கூடலூர் அடுத்த கொலப்பள்ளி குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தை ஒன்று நடமாடுவதாக கடந்த 2-ம் தேதி தகவல் பரவியது. இதையடுத்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டபோதும், அவர்கள் கண்காணிப்பு பணியை மேற்கொள்ளவோ, அல்லது சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நிலையில் கடந்த 4-ம் தேதி சேரங்கோடு அடுத்துள்ள சேவியர்மட்டம் பகுதியில் வசந்தராஜ், வைதேகி ஆகியோரின் 4 வயது மகள் கிருத்திகா என்பவர் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அவரது அலறல் சத்தம் கேட்டு அருகாமையில் இருப்பவர்கள் வந்து பார்த்தபோது, சிறுத்தை ஒன்று சிறுமியை தாக்க முயற்சித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து மக்கள் எழுப்பிய சத்தத்தால் சிறுத்தை அங்கிருந்து தப்பி ஓடியது. இருப்பினும் இந்த சம்பவத்தில் சிறுமி கிருத்திகாவிற்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக சிறுமியை மீட்டு அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே தொடர்ந்து இதுபோன்று சிறுத்தை நடமாட்டம் இருந்து வரும் நிலையில், வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சிறுத்தையின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், கண்காணிப்பை பலப்படுத்தவும் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்தகட்டமாக தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக அப்பகுதி மக்கள் அறிவித்துள்ளனர். இதன் காரணமாக கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

கூடலூர் அருகே சிறுத்தை தாக்கியதில் சிறுமி படுகாயம் அடைந்த நிலையில், சிறுத்தையை உடனே பிடிக்க வலியுறுத்தி கொளப்பள்ளி பகுதியில் கடைகளை அடைத்து பொதுமக்கள் 5-ம் தேதி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பலமுறை புகார் அளித்தும் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததால், சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து வேறு பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கொளப்பள்ளி பகுதியில் கடைகளை அடைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸார் மற்றும் வனத்துறையினர், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அப்போது மயக்க ஊசி செலுத்தி, சிறுத்தையை பிடித்து வேறு பகுதியில் விட நடவடிக்கை எடுக்கப்படும் என முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் உறுதி அளித்தார். இதனையடுத்து தற்காலிகமாக போராட்டத்தை கைவிடுவதாக பொதுமக்கள் அறிவித்தனர்.
இதனிடையே சிறுத்தையை பிடிப்பதற்காக 25 குழுக்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 5 இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டு தொடர் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்படும் என வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று பந்தலூர் அருகே உள்ள மேங்கோ ரேஞ்ச் எஸ்டேட்டில் பணிபுரியும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சிவசங்கர் கர்வா என்பவரது மகள் நான்சி வயது (4).
அதேபகுதியில் உள்ள அங்கன்வாடியில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது, நேற்று காட்டு பகுதியிலிருந்து வெளியே வந்த சிறுத்தை நான்சியை காட்டிற்க்குள் தூக்கிச் சென்றது. இதனைத் தொடர்ந்து அருகில் உள்ளவர்கள் சிறுத்தையை பின்தொடரவே குழந்தை நான்சியை சிறுத்தை தேயிலை தோட்ட பகுதியில் விட்டுச் சென்றது. குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று மாலை முதல் கூடலூர் பகுதியில் சாலை மறியல் மற்றும் போராட்டங்கள் நடைபெற்றது. ஏற்கனவே சிறுத்தையை பிடிக்க 5 இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டு, ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு பணி தீவிர படுத்தப்பட்டு மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ் மற்றும் சத்தியமங்கலம் வனத்துறை கால்நடை மருத்துவர் இருவர் வரவழைக்கப்பட்டு துப்பாக்கிகள் மூலம் மயக்க ஊசிகள் செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
பொதுமக்களின் போராட்டத்தால், முதுமலையிலிருந்து கும்கி யானையான பொம்மன் வரவழைக்கப்பட்டு சிறுத்தையை கண்காணிக்கும் பணி என்பதற்கும் மேற்பட்ட வனத்துறையினரால் நடைபெற்றது. தொடர் சிறுத்தை தாக்குதலால் கூடலூர் பகுதி முழுவதும் 6 இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனால் கூடலூர் முழுவதும் பதட்ட நிலை காணப்படுகிறது. சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வேண்டும் எனக்கோரி பொதுமக்கள் விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே சிறுத்தை தாக்கியதில் உயிரிழந்த இருவருக்கும் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்;-இருவரது மரணத்தை அறிந்து வேதனை அடைந்ததாகவும், வனத்துறை சார்பில் இருவரது குடும்பத்தினருக்கும் இழப்பீடு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். கூடலூர் உப்பட்டி அருகே உள்ள தொண்டியாளம் பகுதியில் இன்று மூன்று மணியளவில் வனத்துறையினர் சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பிடிபட்ட சிறுத்தை 4 வயது ஆண் சிறுத்தை என்று மருத்துவர்கள் தெறிவித்தனர்.

நேற்று ஒரு டோஸ் செலுத்தியும் தப்பித்த சிறுத்தை, இன்று மேலும் ஒரு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. மேங்கோரேஞ்ச் ஆம்ப்ரஸ் என்ற இடத்தில் பிடிக்கப்பட்ட சிறுத்தை முதுமலை கொண்டு செல்லப்படுகிறது. சிறுத்தை பிடிபட்டது குறித்து முதுமலை புலிகள் சரணாலயத்தின் இயக்குனர் வெங்கடேஷ் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில்;- டிசம்பர் மாதம் 21-ம் தேதி சிறுத்தை மூன்று பெண்களை தாக்கியது. உடனடியாக முதுமலையில் இருந்து சிறப்பு குழுவினர் வரவழைக்கப்பட்டு சிறுத்தையை பின் தொடர்ந்து வருகிறார்கள்.
அதனை தொடர்ந்து ஜனவரி 4-ம் தேதி அன்று விளையாடிய ஒரு நான்கு வயது சிறுமியை சிறுத்தை தாக்கி இருக்கிறது. சிறுத்தையை பிடிக்க ஏற்கனவே தலைமை முதன்மை வன பாதுகாப்பு அதிகரியிடம் அனுமதி வாங்கப்படிருக்கிறது. கூண்டு வைத்து பிடிக்கவும், இல்லையெல் மயக்க மருந்து செலுத்தி பிடிக்க அனுமதி வாங்கப்பட்டிருக்கிறது. சிறுத்தை எந்த வழியில் போகிறது வருகிறது என்பது தெரியாது. இதுவரை எட்டு சிறுத்தைகள் பிடிக்கப்படிருக்கிறது.
கூண்டு வைத்துதான் பிடிக்கப்பட்டிருக்கிறது. புலிதான் எந்த வழியில் போகின்றதோ அந்த வழியில் வரும். ஆனால் சிறுத்தை அப்படியில்லை என்றார். சத்தியமங்கலம் மற்றும் முதுமலையில் இருந்து வந்த வன மருத்துவர்கள் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடித்தனர். முதுமலை வனப்பகுதியில் விடப்பட இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.