பெங்களூரு சிக்பள்ளாப்பூர் அருகே நின்றிருந்த டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் ஆந்திர தொழிலாளர்கள் உட்பட 13 பேர் பலியானார்கள்.
கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் தாலுகா சித்ராவதி அருகே ஹைதராபாத் -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆந்திராவில் இருந்து பெங்களூரு நோக்கி நேற்று காலை கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அதில் டிரைவர் உட்பட 13 பேர் பயணித்தனர். இந்த நிலையில் கார் சித்ராவதி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது சாலையோரம் நின்றிருந்த டேங்கர் லாரி பின்புறம் கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் காரின் முன் பகுதி அப்பளம் போல சுக்கு நூறாக நொறுங்கியது. அத்துடன் காரில் இருந்தவர்கள் மரண ஓலம் விட்டனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் விரைந்து வந்தனர்.

பின்னர் அவர்கள் காரில் இருந்தவர்களை மீட்க முயன்றனர். ஆனாலும் இந்த கோர விபத்தில் காரில் இருந்த டிரைவர் உட்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை அடுத்து அவரை அந்தப் பகுதி மக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிக்பள்ளாப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது.
இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்து போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் சிக்பள்ளாப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
பின்னர் போலீசார் பலியான 12 பேரின் உடல்களையும் மருத்துவமனையில் உயிரிழந்த ஒருவரின் உடலையும் கைப்பற்றி பெற பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் இரண்டு சிறுவர்கள், மூன்று பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தது தெரியவந்தது. விபத்தில் பலி ஆன அவர்களின் பெயர் விபரம் முதலில் போலீசாருக்கு கிடைக்கவில்லை. இதை அடுத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் உயிரிழந்தவர்களின் 12 பேரின் பெயர் விவரம் போலீசாருக்கு கிடைத்துள்ளது. பலியானவர்களின் பெயர் விவரம் பின்வருமாறு:-
1. தொட்டப்பள்ளாப்பு ராவை சேர்ந்த நவீன் குமாரின் மனைவி அருணா (வயது 32).
2. அருணாவின் மகன் ரித்விக் (வயது 6).
3. பெங்களூரு காவல் பைரசந்திராவில் சலூன் கடையில் வேலை பார்த்து வந்த பாகே பள்ளியைச் சேர்ந்த நரசிம்மமூர்த்தி (வயது 37).
4. ஆந்திரா மாநிலம் கோரண்டலாவை சேர்ந்த நரசிம்மப்பா (வயது 40).
5. ஆந்திரா பள்ளியைச் சேர்ந்த பெருமாள் பவன் குமார் (வயது 32).
6. பெங்களூரு காமாட்சி பாளையாவை சேர்ந்த சுப்புமா (வயது 66).
7. ஆந்திரா புட்டபர்த்தி மாவட்டம் பெனுகொண்டா மாவட்டம் கவுனிப்பெண்டா கிராமத்தைச் சேர்ந்த சாந்தம்மா (வயது 37).
8. சாந்தம்மாவின் மகன் ராஜவர்தன் (வயது 15).
9. பெங்களூரு எளங்கங்காவில் கூலி வேலை பார்த்து வந்த ஆந்திர மாநிலம் மரக்கோரப்பள்ளியைச் சேர்ந்த நாராயணப்பா (வயது 50).
10. பெங்களூரு காமாட்சி பாளையாவில் நெசவு வேலை பார்த்து வந்த ஆந்திர மாநிலம் சத்திய சாய் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடரமணப்பா (வயது 51).
11. பெங்களூரு ஹொங்கசந்திராவில் பெயிண்டர் வேலை பார்த்து வந்த ஆந்திர மாநிலம் சத்திய சாய் மாவட்டம் இந்து பூஜை சேர்ந்த வெங்கடாத்ரி (வயது 32).
12.வெங்கடாத்ரியின் மனைவி லட்சுமி (வயது 20).
விபத்தில் பலியான மற்றொருவரின் பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை.

விபத்தில் பலியானவர்கள் ஆந்திர மாநிலம் மற்றும் சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் பெங்களூருவில் தங்கி கூலி வேலை பார்த்து வந்ததும் தசரா விடுமுறைக்கு சொந்த ஊருக்கு சென்று விட்டு திரும்பி வந்த போது விபத்தில் சிக்கி உயிரிழந்தது தெரிய வந்தது.
காலை நேரத்தில் கடும் பணி மூட்டும் காரணமாக சாலையோரம் நின்ற லாரி தெரியாததாலும் டிரைவர் காரை வேகமாக ஓட்டியதாலும் இந்த கோர விபத்து நடந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தால் ஹைதராபாத் -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை அடுத்து போலீசார் விரைந்து வந்து விபத்துக்குள்ளான காரியம் லாரியும் கிரேன் உதவியுடன் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.