தமிழகத்தில் பெய்த கனமழையால் கடந்த 5 நாட்களில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மேலாண்மைத்துறை இன்று (மே 21) தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் கோடை மழை தொடர்ந்து பெய்து வருகிறது. கோடை காலத்தில் தமிழகத்தில் 12.5 செ.மீ மழை பெய்வது இயல்பாகும். ஆனால் இந்த வருடம் மார்ச் 1 முதல் மே 20 ஆம் தேதி வரை 9.63 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

இன்று காலை வரை தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. அதில் அதிகப்படியாக நாமக்கல் மாவட்டத்தில் 712 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இந்த கோடை மழை, தொடர்பாக, தமிழக பேரிடர் மேலாண்மைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்;-
தமிழகத்தில் கனமழை காரணமாக மே 16 ஆம் தேதி முதல் மே 20 ஆம் தேதி வரை மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்ந்து மே 24 ஆம் தேதி வரை தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, நீலகிரி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரி கடல் மற்றும் மன்னார் வளைகு பகுதிகளில் 40 முதல் 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

கடலோர பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள 437 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம் பலத்த காற்று, கடல் அலை சீற்றம் குறித்து பொதுமக்களுக்கு தகவல் வழங்கப்பட்டு வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும்.

திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும் பொருட்டு நெல்லை, தென்காசி. திண்டுக்கல், கோவை, நீலகிரி, விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களில் உள்ள 4.05 கோடி கைபேசிகளுக்கு குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை தகவல் அனுப்பப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.