ரயில் நிலையத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி – திருநெல்வேலி ரயில் வழித்தடத்தில் உள்ளது பாவூர்சத்திரம் ரயில் நிலையம். செங்கோட்டையில் இருந்து தென்காசி, பாவூர்சத்திரம், கடையம், அம்பாசமுத்திரம் திருநெல்வேலி வழியாக பயணிகள் ரயில்கள் மற்றும் செங்கோட்டை,

ஈரோடு பாசஞ்சர் ரயில் திருநெல்வேலியில் இருந்து கொல்லம் மற்றும் பாலக்காடு செல்லும் ரயில்கள் மற்றும் செங்கோட்டை தாம்பரம் விரைவு ரயில் போன்ற ரயில்கள் பாவூர்சத்திரம் வழியாக இயக்கப்படுவதால் இந்த ரயில் நிலையத்தில் பயணிகள் அதிகம் பேர் வந்து செல்வர்.
இந்த நிலையில் இன்று ரயில் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள பயணிகள் நிழல் கூரையில் சுமார் 1.30 மணியளவில் வாலிபர் தூக்கில் இறந்த நிலையில் தொங்குவதாக பயணி ஒருவர் காவல் நிலையத்துக்கு, ரயில் நிலைய அதிகாரிக்கு தகவல் அளித்தனர்.

பின்னர் புகாரின் பேரில் விரைந்து வந்த தென்காசி இருப்பு பாதை காவல் நிலைய அதிகாரி தலைமையில் போலீசார் நடத்திய விசாரணையில் இறந்து போன வாலிபர் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் காளிராஜா (25).

இவர் கட்டிட தொழிலாளி என்பது விசாரணையில் தெரியவந்தது. இவர் இன்று காலையில் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு, மதிய உணவையும் எடுத்து கொண்டு தனது இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு செல்லாமல் பாவூர்சத்திரம் ரயில் நிலையம் முன்பு வாகனத்தை நிறுத்தி விட்டு ரயில் பயணிகள் நிழல் கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என தெரியவந்துள்ளது.

அவரது உடலை கைப்பற்றி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல : சொந்த காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் கீழ்க்கண்ட சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்ணுக்கு அழையுங்கள்.
சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண் – 044-24640050
மாநில தற்கொலை தடுப்பு உதவி எண் – 104