திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுக்கா பெருங்குடி ஊராட்சியில், பெருங்குடி அரித்துவாரமங்கலம் சாலையில் கேத்தனூர் என்ற ஊருக்கு செல்ல கூடிய வழியில் பயணிகள் நிழற்குடை ஒன்றை வலங்கைமான் ஒன்றியம் சார்பாக பழுதடைந்த பயணிகள் நிழற்குடையை இடித்து விட்டு புதிதாக பயணிகள் நிழற்குடையை கட்டி வருகிறார்கள். இந்த பயணிகள் நிழற்குடை பணிகள் பெரும்பாலும் முடிவடைந்து பூச்சி பூசும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் பயணிகள் நிழற்குடை கட்டிடத்தின் மேலே மிகவும் தாழ்வாக கைகளை நீட்டினால் தொடும் அளவிற்கு மின்சார கம்பி இணையம் சென்று கொண்டிருக்கிறது.

இதனை தொடர்ந்து, இன்று மதிய நேரத்தில் பயணிகள் நிழற்குடை கட்டிடத்தின் மீது கட்டிட பணியில் 18 வயதுடைய வினோத்குமார் என்ற பெருங்குடி பகுதியை சேர்ந்த, தந்தை இல்லாத இந்த இளைஞர் கட்டிட பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது, மிகவும் தாழ்வாக சென்ற மின் கம்பியில் கைகள் பட்டு உரசி வினோத்குமார் சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் ஒன்றிய அலுவலர்களின் அலட்சிய போக்கால் தந்தையை இழந்த ஒரு மகன் தற்போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார்.

இவருடைய உடல் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, உடலை உடற்கூறு ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, அரித்துவார் மங்கலம் காவல்துறையினர், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இது குறித்து வலங்கைமான் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் சென்று கேட்டபொழுது, நாங்கள் ஆலங்குடி துணை மின் நிலையத்தில் மின் இணைப்பை துண்டிக்க சொல்லி விட்டோம் என கூறினார்கள். இதுகுறித்து ஆலங்குடி உதவி மின் நிலைய உதவி பொறியாளர் அவர்களிடம் சென்று கேட்ட பொழுது, எங்களுக்கு எந்தவித தகவலும் வரவில்லை அப்படி வந்திருந்தால் நாங்கள் மின் இணைப்பைத் துண்டித்திருப்போம் என தெரிவித்தார்கள்.

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் ஒன்றிய அலுவலக அதிகாரிகளின் அலட்சியத்தால் ஒரு உயிர் இன்று மின்சாரம் தாக்கி பரிபோய் உள்ளது. வலங்கைமான் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.