விழுப்புரம் மாவட்டம், தீபாவளி சீட்டு நடத்திய ரூபாய் 76 1/4 லட்சம் மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார். மேலும் இரண்டு பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திண்டிவனத்தை அடுத்த கொல்லியங்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் பிரேம்குமார் வயது 38 இவர் தனது நண்பர் ஒருவரின் மூலமாக திண்டிவனம் அருகே மங்களம் மண்டபத் தெருவை சேர்ந்த குப்புசாமி மகள் கனிமொழி வயது 34 என்பவருக்கு கடந்த 5.11. 2020 அன்று அறிமுகமானார். அப்போது தான் ரெட்டணை சாலையில் ரயில்வே கேட் அருகில், தனியார் அறக்கட்டளை மூலம் தீபாவளி சீட்டு நடத்தி வருவதாகவும், அந்த சீட்டில் சேர்ந்து ரூபாய் 6000 3 மாத தவணையாக செலுத்தினால் அடுத்த தீபாவளிக்கு 11 பொருட்களை தருவதாக கனிமொழி கூறியுள்ளார்.

இதை நம்பிய பிரேம்குமார் அந்த சீட்டில் சேர்ந்து பணம் செலுத்தியதால் அவருக்கு உரிய பொருளைக் கனிமொழி கொடுத்துள்ளார். இந்த நம்பிக்கையின் பெயரில் பிரேம்குமார் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பலரை கனிமொழிக்கு அறிமுகம் செய்து வைத்ததை தொடர்ந்து, அவர்களும் அந்த சீட்டில் சேர்ந்து மாதந்தோறும் ரூபாய் 2000 விதம் பணம் செலுத்தி வந்துள்ளார். கனிமொழி இல்லாத நேரத்தில் அவரது அண்ணன் கார்த்திபன் உறவினர் புருஷோத்தமன் ஆகியோரிடமும் பணம் செலுத்தி வந்துள்ளனர்.
மேலும் பிரேம்குமார் உள்ளிட்ட சிலரிடம் சென்று ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரை கொடுத்தால் அடுத்த 30 நாளுக்குள் தங்க நாணயமும் கொடுப்பதாக கூறியும், கனிமொழி பணம் பெற்றுள்ளார். இவ்வாறாக தீபாவளி சீட்டு மற்றும் தங்க நாணயம் தருவதாக கூறி 450 பேரிடம் இருந்து கனிமொழி உள்ளிட்ட மூன்று பேரும் சேர்ந்து மொத்தம் ரூபாய் 76 லட்சத்து 30 ஆயிரத்து 500 ரூபாய் பெற்றுக் கொண்டு திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்து விட்டனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பிரேம்குமார் உள்ளிட்டவர்கள் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் கனிமொழி கார்த்திபன் புருஷோத்தமன் ஆகிய மூன்று பேர் மீதும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜலட்சுமி சுரேஷ்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று திண்டிவனப் பகுதியில் இருந்து வெளியூருக்கு தப்பி செல்ல முயன்ற கனிமொழியை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் பார்த்திபன் புருஷோத்தமன் ஆகிய இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.