கரூர் மாவட்டம் அருகே தகாத உறவை கண்டித்த கணவரை அவரது மனைவி 2 காதலர்களுடன் சேர்ந்து அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாவட்டம், அடுத்த தோகைமலை அருகே உள்ள கொசூர் ஊராட்சி குப்பமேட்டுப்பட்டி ஒத்தவீடு பகுதியை சேர்ந்தவர் ராசு வயது (47). அதே கிராமத்தை சேர்ந்தவர் பொன்னம்பலம் வயது (40). குப்பமேட்டுப்பட்டி அருகே உள்ள நாதிப்பட்டியை சேர்ந்தவர் சின்னக்காளை வயது (38). இவர்கள் மரம் வெட்டும் தொழிலாளர்கள்.

இவர்களுக்கு உதவியாக ராசுவின் மனைவி வள்ளியும் வயது (44) உடன் சென்று வந்தார். அப்போது வள்ளி ஒரே நேரத்தில் பொன்னம்பலம், சின்னக்காளை ஆகியோருடன் தகாத உறவில் ஈடுபட்டுள்ளார். இந்த விவகாரம் தெரிய வந்த ராசு, தனது மனைவியை அவ்வப்போது கண்டித்தும் வள்ளி கண்டுகொள்ளவில்லை.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு தனது வீட்டு முன் ராசு அமர்ந்திருந்தார். வீட்டுக்குள்ளே வள்ளி வீட்டு வேலைகளை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பொன்னம்பலம் மற்றும் சின்னக்காளை ஆகிய இருவரிடமும் தனது மனைவியிடம் எப்படி பழகலாம் என ராசு தட்டிக்கேட்டுள்ளார்.
அதில் மூவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. அப்போது வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த ராசுவின் மனைவி வள்ளியும் சேர்ந்து ராசுவிடம் தகராறு செய்தார். இதனை அடுத்து 3 பேரும் சேர்ந்து அருகில் கிடந்த கட்டையால் ராசுவை சரமாரியாக தாக்கினர்.

அதில் பலத்த காயமடைந்த ராசு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இறந்தார். இதுகுறித்து அவரது உறவினரான மற்றொரு ராசு தோகைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் எஸ்.ஐ பாலசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

பின்னர் போலீசார், ராசுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வள்ளி, அவரது காதலர்கள் பொன்னம்பலம், சின்னக்காளை ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.