பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? டி.ஆர்.பாலு கேள்வி.!

0
104
மணிப்பூர் கலவரம்

புதுடெல்லி: பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே, மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் பிரதமர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை. இதனால் கடந்த 2 வாரமாக மழைக்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த முடியாமல் அமளி செய்து எதிர்க்கட்சிகள் முடக்கின. இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் ஐ.என்.டி.ஐ.ஏ. கூட்டணியில் உள்ள எதிர்க் கட்சிகள் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. பாராளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றுக்கொண்டார்.

திமுக எம்.பி. டி.ஆர்.பாலு

அதன்மீது ஆகஸ்டு 8, 9-ந்தேதிகளில் விவாதம் நடைபெறும் என்றும், 10-ந்தேதி பதில் அளிக்கப்படும் என்றும் அறிவித்தார். அதன்படி பாராளுமன்றத்தில் இன்று மதியம் 12 மணிக்கு நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. தீர்மானத்தை ஆதரித்து எதிர்க்கட்சி தலைவர்கள் பேசினர். பிரதமரின் இரட்டை என்ஜின் அரசாங்கம் தோல்வி அடைந்துவிட்டது. மணிப்பூரில் அவரது அரசு தோல்வி அடைந்ததை ஏற்றுக்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகாய் தெரிவித்தார். திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பேசும்போது, “மணிப்பூரில் சிறுபான்மையினர் கொல்லப்பட்டுள்ளனர். வன்முறையில் 143 பேர் பலியாகியுள்ளனர்.
65,000 பேர் மாநிலத்தை விட்டு வெளியேறியுள்ளனர். மணிப்பூரின் தெருக்களில் இரண்டு பெண்கள் ஆடைகள் அவிழ்க்கப்பட்டு, கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு, நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து வரப்பட்டுள்ளனர்.

திமுக எம்.பி. டி.ஆர்.பாலு

மணிப்பூர் விஷயத்தில் பிரதமர் ஏன் மவுனமாக இருக்கிறார்? பிரதமர் பாராளுமன்றத்துக்கு வரவில்லை, அந்த மாநிலத்துக்கும் செல்லவில்லை. அதேசமயம், ஐ.என்.டி.ஐ.ஏ. கூட்டணி கட்சியினர் அங்கு சென்று என்ன நடந்தது என்று புரிந்துகொண்டனர்” என்றார். மணிப்பூர் மாநிலம் பற்றி எரிந்தபோது பிரதமர் மோடி ஏன் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டார் என திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சுகதா ராய் கேள்வி எழுப்பினார். மணிப்பூர் முதல்வர் பதவி விலக வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here