- மாவட்ட நிர்வாகம், அரசியல்வாதிகள் துணையில்லாமல், கள்ளச்சாராயம் காய்ச்சி விற்க முடியாது.
- கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம்.
- கள்ளச்சாராய உற்பத்தியாளர்கள், விற்றவர்கள் மீது மட்டும் தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதே தவிர தொடர்புடைய அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை – மனுதாரர்கள்.
- மாநில போலீஸ் தவிர்த்து, வேறு அமைப்பு விசாரித்தால் தான், முழுமையான நீதியை வழங்க முடியும் – மனுதாரர்கள்.
- அரசுத்தரப்பு வாதங்களுக்காக வழக்கு விசாரணை ஆகஸ்ட் 30ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு.
மாவட்ட நிர்வாகம், அரசியல்வாதிகள் துணையில்லாமல், கள்ளச்சாராயம் காய்ச்சி விற்க முடியாது என, கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய வழக்குகள், பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தன.
அப்போது, பா.ஜ.கட்சி வழக்கறிஞர் மோகன்தாஸ், வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஸ்ரீதரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சி.எஸ்.மணி ஆகியோர் மாவட்ட நிர்வாகம், உள்ளூர் அரசியல்வாதிகள் துணை இல்லாமல் கள்ளச்சாராயம் உற்பத்தி செய்து, கொண்டு வந்து விற்க முடியாது. ஆனால் போலீஸ், அரசியல்வாதி தொடர்பில்லை என அரசு கூறுகிறது என்றார்.
கடந்த 2022-23 ம் ஆண்டு மதுவிலக்கு அமலாக்கத் துறை கொள்கை விளக்க குறிப்பில், கள்ளச்சாராயத்தை ஒழிக்க ஆண்டுக்கு 9 கோடி விழிப்புணர்வு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதை முறையாக செலவிட்டிருந்தால் நிச்சயமாக எந்த மரணமும் நிகழ்ந்திருக்காது. மாநில அரசின் தோல்வியை காட்டுகிறது என வாதிட்டார்.

கள்ளச்சாராய உற்பத்தியாளர்கள், விற்றவர்கள் மீது மட்டும் தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதே தவிர தொடர்புடைய அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை எனக் குறிப்பிட்டார்.
சம்பவத்துக்கு பின் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.பி, தாம்பரத்தில் பணியமர்த்த பட்டுள்ளார். சஸ்பெண்ட் திரும்பப் பெற்றதற்கு எந்த் விளக்கமும் தெரிவிக்கவில்லை எனக் குற்றம் சாட்டினார்.
கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி மாநிலங்களில் இருந்து மெத்தனால் கொண்டு வரப்பட்டுள்ளதால் இந்த வழக்கு விசாரணையில் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/madurai-bench-of-madras-high-court-criticized-tamil-nadu-government-for-giving-compensation-to-kallakurchi-hooch-death-but-not-to-srilankan-refugee-girl-child-death/
மாநில போலீஸ் தவிர்த்து, வேறு அமைப்பு விசாரித்தால் தான், முழுமையான நீதியை வழங்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.
அரசுத்தரப்பு வாதங்களுக்காக வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 30ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.