திருமண மண்டபங்கள் விளையாட்டு மைதானங்களில் அரசு சிறப்பு அனுமதி பெற்று மதுபானங்களை பரிமாறலாம் என்கிற தமிழக அரசின் அறிவிப்பு கண்டனத்திற்கு உரியது. இது தமிழக மக்களின் நலனுக்கு முற்றிலும் எதிரானது.
ஜெயலலிதா ஆட்சி காலத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வரும் நோக்கத்தோடு படிப்படியாக மதுக்கடைகளை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் திமுக அரசு 500 மதுபானக்கடைகளை மூடிவிட்டு, புதிய மதுபான கடைகளை நடத்திட அனுமதி வழங்கி வருகிறது. இன்றைய ஆட்சியில் தனி நபர்கள் மது விற்பனை செய்வதை தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் பார்த்து வருகிறோம். இதன் காரணமாக தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போயிருப்பதை காண முடிகிறது.
இவற்றிற்கெல்லாம் ஒரு படி மேலே போய் திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றில் மது பரிமாறலாம் என்கிற அறிவிப்பு அபாயகரமானது.

திராவிட மாடல் ஆட்சி என்று திமுக கூறிக்கொண்டு திராவிட கொள்கைகளை காற்றில் பறக்க விட்டு மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வருகிறது. சட்டமன்றத்தில் திமுக 500 கடைகள் மூடப்படும் இன்று அறிவித்துவிட்டு இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடுவது மக்களை ஏமாற்றுகிற செயல். திருமண மண்டபங்களில் மதுபானம் பரிமாறலாம் என்று அரசு அறிவித்துவிட்டு அது சார்ந்த துறை அமைச்சரே இல்லை என்று சொல்லுவது மக்களை ஏமாற்றும் விதமாக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அதேபோன்று எட்டு மணி நேரம் வேலையை 12 மணி நேரமாக உயர்த்துகிற மசோதாவை திமுக அரசு அறிவித்துவிட்டு இப்போது கருத்து கேட்டு கூட்டம் என்கிற போர்வையில் மீண்டும் அதை வாபஸ் வாங்க இருக்கிறது இதுபோன்ற மக்கள் விரோத செயல்களை திமுக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வி கே சசிகலா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.