இந்தோனேசியாவில் உள்ள ருவாங் எரிமலையில் வெடிப்பு ஏற்பட்டதால் பள்ளிகள், விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டன.
இந்தோனேசியாவின் சுலாவசி மாகாணத்தில் உள்ள ருவாங் தீவில் உள்ள எரிமலை நேற்று முன்தினம் வெடித்து சிதறியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எரிமலையை சுற்றி 7 கிமீக்கு உட்பட்ட பகுதியில் இருந்த 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

எரிமலைக்கு அருகில் செல்ல வேண்டாம் என்றும் எரிமலையைச் சுற்றி 4 கி.மீ. தூரத்துக்கு எந்தப் பணியும் மேற்கொள்ள கூடாது என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எரிமலை வெடிப்பு காரணமாக சுலாவசி மாகாணத்தில் உள்ள பள்ளிகளை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் மானடோ சர்வதேச விமான நிலையம் உள்பட 7 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

எரிமலை வெடிப்பது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் இந்தோனேசியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.