தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி திமுக கொடி அமைத்ததால் எதிர்ப்பு தெரிவித்த பாமகவினருக்கும் திமுகவினருக்கும் மோதல். அராஜகத்தில் ஈடுபட்ட வரை கைது செய்யக்கோரி பாமக சாலை மறியல் செய்ததால் காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து காணலாம்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செவிலிமேடு பெரிய தெருமுனை பகுதியில் பாமக பிரமுகர் ஜவகர் என்பவர் கடை அருகே திமுக புதிய கொடிக்கம்பம் நடுவதற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வந்த போது அதனை ஜவகர் தடுத்து நிறுத்தி தேர்தல் நன்னடத்தை விதிகள் இருப்பதாக கூறியதும் திமுகவினர் திரும்பி சென்றனர்.

இந்த நிலையில் இன்று 11 மணியளவில் அப்பகுதியில் அருள்மணி என்பவருடன் பத்துக்கும் மேற்பட்டோர் வந்து கொடி கம்பம் பதிய வைத்துள்ளனர். இதற்கு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்த ஜவகர் மற்றும் அருள்மணி இடையே கைகலப்பு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டனர்.
இந்த நிலையில் ஜவகர் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்ற போது தடுத்த போது எதிர் தரப்பினர் பலரின் மேல் பெட்ரோல் பட்டதாகவும், இதனால் தங்களை தாக்க வந்ததாக கூறி திமுகவினரும்,

தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்பட்டதாகவும் தன்னை கொலை மிரட்டல் விடுத்ததாக பாமக பிரமுகர் ஜவகர் காஞ்சி தாலுகா காவல் நிலையத்திலும் புகார் தெரிவித்தனர்.

இந்த தகவலை அறிந்த பாமகவினர் மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமையில் காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நீடித்து இருபுறமும் இரண்டு கிலோமீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற டிஎஸ்பி முரளி தலைமையிலான காவல்துறையினர் துரிதுமாக செயல்பட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பாமகவினரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
மேலும் அப்பகுதியில் பதட்டத்தை தணிக்கும் வகையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் நடப்பட்ட கொடி கம்பத்தை அகற்றும் பணியும் நடைபெறும் என தெரிய வருகிறது.