விழுப்புரம் தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதால் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.விழுப்புரம் நகரில் இயங்கி வரும் இராம கிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்த பிளஸ் டூ மாணவி அவரது வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர்கள், உறவினர்கள் நியாயம் கேட்டு மாணவி படித்த பள்ளியில் குவிந்தனர். இந்த தகவல் கேள்விப்பட்ட விழுப்புரம் சரக டிஐஜி ஜியாவுல் ஹக் விழுப்புரம் சரகத்தில் உள்ள போலீசர்களை வரவழைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி உள்ளார்.ஏற்கனவே கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரிலுள்ள தனியார் பள்ளியில் படித்த மாணவி ஸ்ரீமதி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி பள்ளி விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். மாணவி இறப்புக்கு நீதி கேட்டு நடந்த போராட்டம் கலவரமாக மாறி பள்ளியை சூறையாடப்பட்டது.

அதை மனதில் வைத்துக் கொண்ட காவல் துறையினர் விழுப்புரம் மாவட்டத்தில் இது போன்ற சம்பவம் நடந்து விடக்கூடாது என்று போலீசாரை குவித்துள்ளனர்.விழுப்புரம் மாணவி ஏன் தற்கொலை செய்து கொண்டார்? என்ன நடந்தது? என்று விசாரித்த போது.விழுப்புரம் அருகில் உள்ள ஒரு கோடி கிராமத்தில் வசிக்கும் பட்டியலிட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நேதாஜி – மதினா தம்பதியர். இவர்களது மகள் சுனிதா. விழுப்புரம் ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் டிசம்பர் 13ஆம் தேதி அரையாண்டு தமிழ் தேர்வு நடைபெற்றது. அப்போது மாணவி பிட் அடித்ததாகவும் அதை பார்த்த பள்ளி ஆசிரியர் சௌமியா, பள்ளி முதல்வரிடம் ரிப்போர்ட் செய்ததாகவும் கூறப்படுகிறது.பள்ளி முதல்வர் மாணவி சுனிதாவின் தந்தை நேதாஜி, தாயார் மதினா இருவரையும் நேற்று முன்தினமே பள்ளிக்கு அழைத்து மாணவி செய்த சம்பவத்தை சொல்லி நாளைக்கு பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளார்.
பள்ளி கேட்டுக்கு வெளியில் வந்தவுடன் தந்தை நேதாஜி ”இப்படி தவறு செய்து அசிங்கப்படுத்திட்டியே” என்று கோபப்பட்டு மகள் சுனிதாவின் கன்னத்தில் அறைந்துள்ளார்.கண்கலங்கியபடி பெற்றோர்களுடன் வீட்டுக்கு சென்ற மாணவி சுனிதா இரவு சாப்பிடாமலும், சரியாக தூங்காமலும் மௌனமாக இருந்துள்ளார்.நேற்று மதியம் வீட்டில் இருந்த மின்விசிறியில் துணியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த தகவல் அறிந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகளுடன் பள்ளிக்குச் சென்று நியாயம் கேட்டு போராடினர்.இதனால் பள்ளிக்குள்ளும், வெளியேவும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பெற்றோர்களிடம் புகார் கொடுங்கள் விசாரித்து நடவடிக்கை எடுக்கிறோம் என புகார் கேட்டோம் புகார் கொடுக்காமல் நிர்வாகத்தினரிடம் ஆறு மணி நேரமாக பேசி வருகின்றனர் என்கிறார்கள் காவல் துறையினர்.மாணவி தந்தை நேதாஜி திமுக கிளை செயலாளராக உள்ளார்.
தற்கொலை செய்து கொண்ட மாணவியின் தரப்பினர் எஸ்சி/எஸ்டி பிரிவிலும் கொலை வழக்கும் பதிவு செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர்.பள்ளி நிர்வாகத்தினர் இந்த பள்ளியில் 2000 மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்கள் நல்லொழுக்கமாக திறமையாக உருவாக்க வேண்டும் என்று நல்ல கல்வியை கொடுத்து வருகிறோம். பிட் அடித்ததை கேட்பது தவறு என்றால் பள்ளியை எப்படி நடத்துவது என்று கேள்வி கேட்கிறார்கள்.முண்டியபாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள மாணவி உடலை பெற்றோர்களிடம் ஒப்படைக்க போலீசார் போராடி வருகின்றனர்.