கடந்த 2021-ல் நடந்த சட்டசபை தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்ற நா.புகழேந்தி உயிரிழந்ததை தொடர்ந்து, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு கடந்த 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாஜக கூட்டணியில் பாமக சார்பில் வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் சி.அன்புமணி, சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா உள்பட மொத்தம் 29 பேர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர். இவர்கள் 3 பேர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அதிமுக புறக்கணிப்பு செய்தது. கடந்த 10 ஆம் தேதி அமைதியாக நடந்து முடிந்த தேர்தலில் மொத்தம் 82.48 சதவீத வாக்குகள் பதிவானது. அதன்பிறகு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தான் இன்று (சனிக்கிழமை) விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

அதன்பிறகு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. மொத்தம் 20 சுற்றுகளாக ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த தேர்தல் முடிவு தொடர்பான அப்டேட்கள் பின்வருமாறு:-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 7 சுற்றுகள் முடிவில் 44,780 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். பாமக வேட்பாளர் அன்புமணி 17,457 வாக்குகளை பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 3,556 வாக்குகள் பெற்றுள்ளார்.