விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக, பாமக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். நாளை முதல் தலைவர்கள் பிரசாரத்தை தொடங்க உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி வரும் ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14 ஆம் தேதி தொடங்கியது. அன்று 5 சுயேச்சை வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர்.

அதை தொடர்ந்து 15 ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சித்த மருத்துவர் நரேந்திரன் என்பவர் சுயேச்சையாக மனுதாக்கல் செய்தார். இதுவரை 7 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா, பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளராக அன்புமணி,
நாம் தமிழர் கட்சியில் அபிநயா அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுகவும், தேமுதிகவும் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது. இதுகுறித்து இடைத்தேர்தலில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. விக்கிரவாண்டி இடைதேர்தலில் வேட்புமனு தாக்கல் 21 ஆம் தேதியுடன் முடிவடையும்.

இதனால் இன்று திமுக, பாமக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, தேர்தல் பணிக்குழு ஜெகத்ரட்சகன் எம்.பி., அமைச்சர் பொன்முடி தலைமையில் கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக சென்று பிற்பகல் 12 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
இன்று மதியம் 1 மணியளவில் பாமக வேட்பாளர் அன்புமணி கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக சென்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா நாளை மனு தாக்கல் செய்ய உள்ளார். நாளை மறுதினம் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது.

24 ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடக்கிறது. 26 ஆம் தேதி வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள். அன்று வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்படுகிறது. நாளை முதல் திமுக, பாமக வேட்பாளர்களும், அந்த கட்சி தலைவர்களும், அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.
திமுக வேட்பாளரை ஆதரித்து ஏற்கனவே அமைச்சர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களான செல்வப்பெருந்தகை, திருமாவளவன், பாலகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்டோரும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர்.

தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாக திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரசாரம் செய்ய உள்ளார். இதேபோல், பாமக வேட்பாளரை ஆதரித்து ராமதாஸ்,
அன்புமணி மற்றும் கூட்டணி கட்சிகளான பாஜக தலைவர் அண்ணாமலை, ஓபிஎஸ், டிடிவி.தினகரன், ஜி.கே.வாசன், ஜான்பாண்டியன் உள்ளிட்டவர்களும், நாம் தமிழர் கட்சி அபிநயாவை ஆதரித்து ஒருங்கிணைப்பாளர் சீமானும் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். எனவே நாளை முதல் அனல் பறக்கும் பிரசாரம் தொடங்குகிறது.