விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி காலமானதை தொடர்ந்து, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வருகிற 10 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்தியா கூட்டணியில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா, தேஜ கூட்டணியில் பாமக வேட்பாளர் அன்புமணி, நாம் தமிழர் அபிநயா மற்றும் சுயேச்சைகள் உள்ளிட்ட 29 பேர் போட்டியிடுகின்றனர். அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் பின்வாங்கிய நிலையில்,
இடைத்தேர்தலில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. பிரச்சாரத்துக்கு 5 நாட்களே எஞ்சி உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேஜ கூட்டணியில் பாமக வேட்பாளரை ஆதரித்து கூட்டணி கட்சி தலைவர்கள் யாரும் பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை.

பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி, அவரது மனைவி சவுமியா அன்புமணி உள்ளிட்டவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். பிரச்சாரத்துக்கு செல்லும் இடங்களில் பாமக தலைவர் அன்புமணி, இந்த தேர்தலில் அதிமுகவினர் தங்கள் வாக்குகளை பாமகவுக்கு அளிக்க வேண்டும்,
ஆதரவு தர வேண்டும் என்று பேசி வாக்கு சேகரித்து வருகிறார். ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் பாமகவுக்கு அதிமுகவினர் ஆதரவு அளிக்க வேண்டாம் என்று ரகசிய உத்தரவு போட்டுள்ளார்.

இந்த நிலையில் அதிமுகவினர் ஓட்டுகளை எப்படியாவது வாங்குவதற்காக ஜெயலலிதாவின் புகைப்படத்தை பெரியதாக அச்சடித்து தேர்தல் பிரச்சார நோட்டீஸ்களிலும், பிரசார மேடை பொதுக்கூட்ட இடங்களில் வைக்கப்பட்ட பேனர்களிலும் போட்டு அதிமுகவினர் வாக்குகளை கவர புது வியூகத்தில் பாமகவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
விக்கிரவாண்டி, காணை பகுதிகளில் நடந்த பாமக பிரச்சார நிகழ்ச்சிகளில் மோடி படத்துக்கு மேல் பகுதியில் பெரிய அளவில் ஜெயலலிதாவின் படத்தை போட்டு முக்கியத்துவம் கொடுத்திருந்தனர்.

கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி வேண்டாம் என்று தேஜ கூட்டணிக்கு சென்ற பாமக தற்போது ஜெயலலிதாவின் புகைப்படத்தை போட்டு எப்படி பிரச்சாரம் மேற்கொள்ளலாம் என அதிமுக நிர்வாகிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பாமகவை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். பாமக தரப்பில் கூறுகையில்;-

தேஜ கூட்டணியில் உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், அமமுக டிடிவி தினகரன் ஆகியோர் இருக்கிறார்கள். அவர்கள் ஜெயலலிதாவின் புகைப்படத்தை போட்டு தான் இயக்கத்தை வழி நடத்துகிறார்கள். எனவே கூட்டணி கட்சி என்பதால் ஜெயலலிதாவின் புகைப்படத்தை பதிவிட்டதாக தெரிவித்துள்ளனர்.