தேமுதிக தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான நடிகர் விஜயகாந்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நேற்று சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் படத்துக்கு நடிகர், நடிகைகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கமல்ஹாசன், விக்ரம், சரத்குமார், ஜெயம் ரவி, ராதாரவி, பார்த்திபன், விஜய் ஆண்டனி, யோகி பாபு, வாகை சந்திரசேகர், நடிகைகள் ராதா, அம்பிகா, தேவயானி, லதா, சிம்ரன் ரேகா, சரண்யா பொன்வண்ணன், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முரளி ராமசாமி, நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் டி.சிவா, பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க பொதுச்செயலாளர் ஆர்.வி.உதயகுமார், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, சத்யஜோதி டி.ஜி.தியாகராஜன், ஏ.சி.சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன், மைத்துனர் எல்.கே. சுதீஷ் கலந்து கொண்டனர். அப்போது கமல்ஹாசன் பேசும் போது;- ‘விஜயகாந்தை நான் முதன் முதலாக சந்தித்த போது எப்படி இருந்தாரோ அப்படியே தான் கடைசி வரைக்கும் இருந்தார். அவரை எனக்கு விஜய்ராஜுவாகவும் தெரியும், விஜயகாந்தாகவும் தெரியும். விமர்சனங்களையும், அவமானங்களையும் தாண்டி வளர்ந்தவர் விஜயகாந்த்.

இதனால் தான் பட்ட அவமானங்களையும், துன்பங்களையும் மற்றவர்கள் படக்கூடாது என்று நினைத்து வாழ்ந்தார். கடைநிலை நடிகர்களையும் கருணையுடன் பார்த்தார். தமிழக அரசியலிலும் உயர்ந்த இடத்தைப் பிடித்தார். அவரது இறுதி நிகழ்ச்சியில் சேர்ந்த கூட்டம் தான், அவர் தன் வாழ்க்கையில் சேர்த்து வைத்த சொத்து. அவர் நல்லவராகவே வாழ்ந்தார் என்று சொல்வோம். அவரை போல் வாழ முயற்சிப்போம்’ என்றார்.
இந்த நிகழ்ச்சியில் பேசியவர்கள், புதிதாக கட்டப்பட்டு வரும் தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்துக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் கோரிக்கை வைத்தனர்.