அரசியலில் கால்பதிக்கும் ஆசையில் நடிகர் விஜய் புதிய கட்சி தொடங்கவுள்ளதாக பல தகவல்கள் தினம் தினம் வெளியாகி வரும் நிலையில், டெல்லி சென்று அங்கு முக்கிய தேசிய கட்சி தலைவர்களை சந்திக்க அதிரடியான பிளான்களை நடிகர் விஜய் தயார் செய்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது . இந்தப் பயணத்தில் யாரெல்லாம் செல்லவிருக்கின்றனர்? அடுத்தகட்ட திட்டங்கள் என்ன? போன்றவை பெரிதும் முக்கியத்துவம் பெற்றுள்ளன மேலும் அவரது ரசிகர்களிடமும் பெரும் எதிர்பார்பார்பை பெற்றுள்ளது .
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கப் போகிறார் என்ற விஷயம் தீயாய் பரவி கொண்டு இருக்கிறது. பல ஆண்டுகளாகவே அரசியல் ரீதியிலான கருத்துகளை தனது ஆடியோ லாஞ்ச்சில் பேசி வருகிறார். தனது திரைப்படங்களிலும் வசனங்களாக இடம்பெறச் செய்கிறார். கடந்த 2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை களமிறக்கி ஒத்திகை பார்த்த விஜய் , அவர் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி கிடைத்ததை அடுத்து , அவரது அரசியல் பயணத்தில் மற்றுமொரு அத்தியாயமாக , புதிய கட்சியினை தொடங்கும் பணியில் மும்முரம் காட்டிவருகிறார் .

மேலும், அரசியல் ரீதியிலான செயல்பாடுகளை அதிகப்படுத்த தொடங்கினார். வாரந்தோறும் ஏழை குழந்தைகளுக்கு பால், முட்டை, ரொட்டி வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்தார். மாவட்டந்தோறும் படிப்பகங்கள், நூலகங்கள் போன்றவற்றை திறந்து வைத்தார். மாவட்ட, மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த 10, 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளை சென்னை அழைத்து வந்து பரிசுகள் கொடுத்து ஊக்கப்படுத்தினார்.
ஏழை மாணவர்களுக்கு ஊக்கத்தொகை, கல்வி உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுத்துவருகிறார் . சமீபத்தில் தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை நேரில் வழங்கினார். இந்த சூழலில் தனது மக்கள் நலப் பணிகளை அரசியலாக மாற்றும் முயற்சிக்கு உத்வேகம் அளித்திருக்கிறார் நடிகர் விஜய். நேற்றைய தினம் சென்னையை அடுத்த பனையூரில் தனது மக்கள் மன்ற நிர்வாகிகள் உடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.
சுமார் மூன்று மணி நேரம் நடந்த ஆலோசனையில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. கட்சியின் பெயரில் கழகம் என்ற சொல் இடம்பெறும் வகையில் தேர்வு செய்யவுள்ளனர். அடுத்த ஒரு மாதத்தில் கட்சியை பதிவு செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் முக்கிய நிர்வாகிகள் டெல்லி செல்லவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அப்போது இந்திய தேர்தல் ஆணையத்திற்கு சென்று தங்கள் கட்சியை பதிவு செய்ய திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. நடிகர் விஜய் தலைமையில் நேற்று நடந்த கூட்டத்தில், வரும் 2024 மக்களவை தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று மக்கள் இயக்கத்தினர் பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஆனால் 2026 சட்டமன்ற தேர்தலில் களமிறங்குவதே சரியாக இருக்கும் என்று விஜய் தெரிவித்துள்ளார். இதற்காக தற்போது முதலே தீவிர களப்பணியாற்ற வேண்டும். இன்னும் இரண்டு ஆண்டுகளில் தங்கள் கட்சியின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் நன்கு பேசுபொருளாக மாற வேண்டும். அதன்பிறகு தேர்தலில் நின்றால் வெற்றி எட்டி விடும் தூரம் தான் என்று விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
விஜயின் இந்த முடிவை அடைத்து அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் , நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி மக்களுக்கு பல நன்மைகள் செய்வார் என்ற எதிர்பார்ப்பும் அவரது ரசிகர்கள் மத்தியில் வலுத்து வருகிறது .