கடலூர் மாவட்டம் அருகே சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு இந்திய நாட்டின் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் சாமி தரிசனம் செய்ய புதுச்சேரியில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் அண்ணாமலை பல்கலைக்கழக ஹெலிகாப்டர் இறங்கும் தளத்திற்கு வந்தார். இதனைத் தொடர்ந்து அவர் கார் மூலம் நடராஜர் கோவிலுக்கு வருகை தந்தார். அவருக்கு கோயில் பொது தீட்சிதர்கள் சார்பில் பூரண கும்ப மரியாதை கொடுக்கப்பட்டது. சாமி தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உள்ளனர்.
இதனை தொடர்ந்து கோயிலுக்குள் சென்று கனகசபை மீது ஏறி நின்று ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத நடராஜரை சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவிந்தராஜ பெருமாள் சன்னதிக்கு சென்று சுவாமி தரிசனம் செய்ததையடுத்து, கார் மூலம் பரங்கிப்பேட்டை சென்று அங்குள்ள பாபாஜி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். இதேபோல், புவனகிரியில் உள்ள எல்லை அம்மன் கோயிலிலும் தரிசனம் செய்தார்.

இந்த நிலையில், இவர் வருகையை ஒட்டி சிதம்பரம் நகரத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும், கோயில் நான்கு கோபுர வாயில் வழியாக காலை 7 மணிக்கு முதல் பக்தர்கள் செல்ல காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகியினர்.
குறிப்பாக, வெளியூரிலிருந்து வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தமிழ்நாடு வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில், 1500-க்கும்த்துக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். கீழசன்னதி பகுதியில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டது. மேலும் கோயிலுக்கு செல்ல பத்திரிக்கையாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

போக்குவரத்து நெருக்கடி குடியரசு துணைத் தலைவர் வருகையையொட்டி கோயில் வீதிகளில் வாகனங்கள் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து நகரில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. சிதம்பரம் நகர பகுதியில் பயிலும் பள்ளி, கல்லூரி, மாணவ மாணவிகள் போக்குவரத்து நெருக்கடியால் கடும் அவதிக்குள்ளாகினர்.
குடியரசு துணைத் தலைவர் காலை 9.50 மணிக்கு தான் கோயிலுக்கு வருகை தந்தார். ஆனால் காலை 8 மணி முதல் வீதிகளில் போக்குவரத்து வாகனங்கள் நிறுத்தப்பட்டதால், மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் மாணவர்கள் அவதி அடைந்தனர்.

இந்த நிலையில், கோயிலுக்குள் வரும் பக்தர்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பக்தர்கள் கொண்டு வரும் உடைமைகள் ஸ்கேன் செய்யப்பட்டு மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்டு அதில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பிறகு கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். போலீஸ் மோப்பநாய் மூலம் பல்வேறு இடங்களிலும் சோதனை நடைபெறுகிறது. துணை ஜனாதிபதி வருகையையொட்டி சிதம்பரத்தில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.