வடலூர் வள்ளலார் தெய்வ நிலைய சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையின் 158 ஆம் ஆண்டு தொடக்க விழா நடந்தது. கடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலார் என்று அழைக்கப்படுகின்ற ராமலிங்க அடிகளார் நிறுவிய சத்திய ஞானசபை உள்ளது.
இங்கு வள்ளலார் ராமலிங்க அடிகளார் 1867 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 11 ஆம் தேதி சத்திய தருமச்சாலையை நிறுவினார். அதன் 158 ஆம் ஆண்டு தொடக்கவிழா நடந்தது.

இந்த விழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அன்றைய தினமே ஜீவகாருண்யத்தை உபதேசித்து அருளினார். அன்றைய தினம் வள்ளலாரின் திருக்கரத்தால் ஏற்றி வைக்கப்பட்ட அணையா அடுப்பு இன்று வரை தொடர்ந்து எரிந்து அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
அன்று முதல் சத்திய தருமச்சாலையில் தினசரி 3 வேளையும் சாதி, மதம், இனம், தேசம், நிறம் என எவ்வித பேதமும் இன்றி அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. தொடக்க விழாவையொட்டி கடந்த 7 நாட்களாக அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரம் மற்றும் திரு அருட்பா முற்றோதல் நடந்தது.

தருமச்சாலையில் நேற்று அதிகாலை 5 மணிக்கு அகவல் பாராயணம் பாடப்பட்டது. அதை தொடர்ந்து 7.30 மணியளவில் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது. அதில் ஏராளமாக சன்மார்க்க அன்பர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அதை தொடர்ந்து தருமசாலையின் சிறப்புகள் குறித்து வில்லுப்பாட்டு, இசை நிகழ்ச்சி, ஜீவகாருண்ய ஒழுக்கம் சத்விசாரம், சொற்பொழிவு, திரு அருட்பா இன்னிசை,

திரு அருட்பா 6 ஆம் திருமுறை சத் விசாரம், சன்மார்க்க நெறி சத் விசாரம், நான்கு வகை ஒழுக்கம், வள்ளலார் அருளிய ஞானசரியை ஆகியவை நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன் மற்றும் வடலூர் வள்ளலார் தெய்வ நிலைய நிர்வாக அதிகாரி ராஜா சரவணக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.