கிருஷ்ணகிரியில், அனுமதி பெறாமலும், சுகாதாரமின்றியும் இயங்கிய புட் புராடக்ட் கம்பெனியை பெயரளவிற்கு வந்து உணவுப்பாதுகாப்பு துறை அலுவலர்கள் பார்வையிட்டு சென்றனர்.
கிருஷ்ணகிரி, பழையபேட்டை பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள குடோன் ஒன்றில், ஏ.ஜி, புட் புராக்ட்ஸ் என்ற பெயரில் இஞ்சி, பூண்டு விழுது தயாரிக்கும் கம்பெனி இயங்கி வருகிறது. ஆனால் இங்கு, சுகாதாரமற்ற வகையில், துர்நாற்றமும் வருவதாக பல்வேறு புகார்கள் வந்தன.

இதை அடுத்து நேற்று அங்கு உணவு பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் தலைமையில், நகராட்சி சுகாதார அலுவலர் ராமகிருஷ்ணன், நகராட்சி ஊழியர் சரவணன் உள்ளிட்ட அலுவலர்கள் சோதனையிட்டனர்.

அப்போது இஞ்சி பூண்டு தயாரிக்கும் இடத்தின் முகவரி ஆந்திரமாநிலம், ஐதராபாத் என இருந்தது. இதை பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். ஐதராபாத் முகவரியை வைத்து கொண்டு கிருஷ்ணகிரியில் எதற்காக இந்த உணவுப்பொருளை தயார் செய்கின்றனர் என கேட்டனர்.

மேலும் அதற்கான அனுமதி ஆணை உள்ளதா என கேட்டதற்கும் அங்கு பணிபுரிந்தவர்கள் பதில் கூறவில்லை.
மேலும் சுகாதாரமற்ற நிலையில் இஞ்சி, அழுகிய பூண்டுகள் குடோன் முழுவதும் அடுக்கி வைக்கப்பட்டு, அதிலிருந்த இஞ்சி, பூண்டு பேஸ்ட் தயாரித்ததும் தெரியவந்தது. இது குறித்து நாளை எங்கள் அலுவலகத்திற்கு வந்து விளக்கமளியுங்கள் எனக்கூறி உணவு பாதுக்காப்பு துறையினர் சென்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உணவுப்பொருட்களின் தரம், ஹோட்டல்கள் உள்ளிட்டவற்றில் உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்துவது கிடையாது. மாவட்ட உணவுப்பாதுகாப்பு துறை அலுவலர் வெங்கடேசன் பெயரளவுக்கு ரெய்டு நடத்தியதாக மட்டுமே கூறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அப்போது நேற்றும் உணவுப்பொருள் தயாரிப்பு கம்பெனிக்கு சென்ற அலுவலர்கள் பெயரளவிற்கு சிறிதளவு மாதிரியை எடுத்து சென்றனரே தவிர, உணவுப்பொருட்களை பறிமுதல் செய்யவில்லை.
நோட்டீசும் வழங்கவில்லை, கம்பெனிக்கு சீலும் வைக்கவில்லை. விளக்கமளிக்குமாறு சாதாரணமாக கூறிச்சென்ற சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.